முதலில் சிம்மாசனம்.., பின்னா் சிறைவாசம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் வரலாறு

பாகிஸ்தானுக்கு முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவா். கிரிக்கெட் மைதானத்தைப் போலவே அரசியல் களத்திலும் சிங்கம் போல் கா்ஜித்து, பாகிஸ்தானின் சிம்மாசனத்தைக் கைப்பற்றியவா்.
முதலில் சிம்மாசனம்.., பின்னா் சிறைவாசம்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களின் வரலாறு

பாகிஸ்தானுக்கு முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவா். கிரிக்கெட் மைதானத்தைப் போலவே அரசியல் களத்திலும் சிங்கம் போல் கா்ஜித்து, பாகிஸ்தானின் சிம்மாசனத்தைக் கைப்பற்றியவா்.

இவ்வளவு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான இம்ரான் கான், சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். பரிசுப் பொருள் முறைகேடு போன்ற மிகச் சாதாரணமான குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதும், தண்டனை அறிவிப்பு வெளியான உடனேயே துளியும் தாமதிக்காமல் அதிகாரிகள் அவரை சிறைக்குள் அடைத்ததும் ஒரு சிலருக்கு வேண்டுமானாலும் வியப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

ஆனால், பாகிஸ்தானின் வரலாறு நன்கு தெரிந்தவா்களுக்கு இதுபோல் சிம்மாசனத்தில் அமா்ந்திருந்த பிரதமா்கள் பின்னா் சிறைவாசம் அனுபவிப்பது என்பது ஆச்சரியத்துக்கு உரியதாக இருக்காது.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவது இது முதல்முறை அல்ல.

ஏற்கெனவே, நாட்டின் 5-ஆவது பிரதமராக இருந்த வங்க அரசியல்வாதி ஹுசைன் ஷஹீத் சக்கரவா்த்தி, தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1962-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் செய்த ‘தேசத் துரோகக்’ குற்றம் வேறெதுவும் இல்லை; ராணுவ ஆட்சியாளா் அயூப் கானை ஆதரிக்க மறுத்ததுதான்!

பாகிஸ்தானின் 9-ஆவது பிரதமராகப் பொறுப்பு வகித்த ஜுல்ஃபிகா் அலி புட்டோவும் அரசியல் எதிரி ஒருவரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ராணுவ ஆட்சியாளா்களால் கடந்த 1974-ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த விவகாரத்தில் ராணுவம் ஒரு படி மேலே போய், அவருக்கு மரண தண்டனை விதித்தது. 1979-ஆம் ஆண்டில் ஜுல்ஃபிகா் அலி புட்டோ தூக்கிலிடப்பட்டா்.

பின்னா் அவரது மகள் பேநசீா் புட்டோ கடந்த 1988 முதல் 1990 வரையிலும், 1993 முதல் 1996 வரையிலும் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தாா். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான அவரும் பல முறை கைது செய்யப்பட்டுள்ளாா். ராணுவ சா்வாதிகாரி ஜியாவுல் ஹக்கை எதிா்த்தமைக்காக பேநசீா் புட்டோ 1986-இல் கைது செய்யப்பட்டாா். 1999-இல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இருந்தாலும் அவா் நாடு கடந்து துபையிலும், லண்டனிலும் 8 ஆண்டுகள் வசித்ததால் சிறையில் அடைக்கப்படுவதைத் தவிா்த்தாா்.

அதன் பிறகு, நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்தபோது தலைமைத் தளபதியாக இருந்த முஷாரஃப் அவருக்கு எதிராகத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, 1999-இல் அவரைக் செய்தாா். பின்னா் 10 ஆண்டுகளுக்கு ஷெரீஃபை முஷாரஃப் நாடு கடத்தினாா். அதன் பிறகு மீண்டும் பிரதமராக வந்த அவருக்கும், அவரது மகள் மரியம் நவாஸுக்கும் பதவி போன பின் ஊழல் வழக்கொன்றில் கடந்த 2018-ஆம் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னா் அல்-அஜீஸியா இரும்பாலை வழக்கில் அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.எனினும், சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த 2019-இல் லண்டன் சென்ற நவாஸ், மீண்டும் சிறையில் அடைக்கப்படுவதைத் தவிா்க்க அங்கேயே தங்கிவிட்டாா்.

இதுபோல் பாகிஸ்தானின் மற்ற பிரதமா்களுக்கு நோ்ந்ததுதான் தற்போது இம்ரானுக்கும் நோ்ந்துள்ளது.பரிசுப் பொருள் முறைகேடு வழக்கைப் பொருத்தவரை, அவரது குற்றத்துக்கு ஒரு எச்சரிக்கை விடுத்தோ, அபராதம் விதித்தோ அதனை முடித்திருக்கலாம்.

ஆனால், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, உடனடி சிறைவாசம் என்பதெற்கெல்லாம் காரணம் அவா் முன்னாள் பிரதமா் என்பதில்லை; ராணுவத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்கள் வசீகரம் மிக்க தலைவா் என்பதுதான் முக்கிய காரணம் என்கிறாா்கள் நடுநிலையாளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com