ஸ்பெயினில் கூட்டு பாலியல் வன்கொடுமை! இளம்பெண்ணிடம் எல்லை மீறிய குற்றவாளிகள்!

ஸ்பெயினில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினில் கூட்டு பாலியல் வன்கொடுமை! இளம்பெண்ணிடம் எல்லை மீறிய குற்றவாளிகள்!

எந்தத் தலைமுறையிலும் நிகழாத மாற்றங்கள் நாளுக்கு நாள் இன்றைய காலகட்டத்தில் நிகழ்ந்து வருகிறது. நவீன கால மனிதர்களின் நாகரிகங்கள், உறவுகளுக்கு இடையேயான சுதந்திரம், தனி மனிதர்களின் மீதான பார்வைகள் எல்லாம் உலகளவில் பண்பட்ட இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அளவை மீறிய காம, குரோத, வன்முறை எண்ணங்களிலிருந்து மனிதனால் முற்றாக விலக முடியவில்லை. அது அனைத்து உயிர்களின் அடிப்படை விழைவுகள் என்றாலும் சட்ட திட்டங்கள் கடுமையான இன்றைய சூழலிலும் இந்த உணர்வுகள் எல்லை மீறுவதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதற்கு வளர்ந்த, வளரும், பின்தங்கிய நாடுகள் என்றெல்லாம் எந்த எல்லைகளும் இல்லை. 

ஸ்பெயினில் கடந்த வாரத்தில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைச் செயல் மேலே சொன்னவற்றிலிருந்து கடுமையான வினாவை எழுப்புகிறது.

தன் தோழியுடன் லண்டனிலிருந்து வந்த 18 வயதான இளம்பெண் ஸ்பெயினின் மகலாஃப் பகுதியில் அமைந்துள்ள பிஎச் மல்லோர்கா என்ற கேளிக்கை விடுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயினைச் சுற்றிப்பார்க்கும் ஆசையில் வந்த அவருக்கு மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில் அந்த விடுதி மதுக்கூடத்திலிருந்த அப்பெண்ணிடம் அறிமுகமில்லாத சிலர் பேச்சுக்கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பின் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விடுதியின் மற்றொரு பகுதிக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். சம்பவம் நடந்தபின், அதிகாலை அந்த விடுதியின் காவலர் ஒருவர் அரை நிர்வாணமாகக் கிடந்த அப்பெண்ணை மீட்டதுடன் விரைவாக காவல்துறைக்கு தகவலைத் தெரிவித்து அவரை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றிருக்கிறார். முதல்கட்ட பரிசோதனைகளிலிருந்து மீண்டு வந்த பின்பே அப்பெண் காவல்துறையிடம் தனக்கு நடந்த வன்முறையை சொல்லியிருக்கிறார்.

உடனடியாக, களத்தில் இறங்கிய ஸ்பெயின் காவல்துறை அடுத்த நாளே இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்து சிறை வைத்தனர். அதன்பின், இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர். இது உலகெங்கும் நடக்கும் நிகழ்வுதானே என்றால், மனதை சுருங்கச் செய்யும் அற்பத்தனமும் நடந்துள்ளது.

ஆக. 14 நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் ஒருவருக்கு ஒருவர் முன் பின் அறியாதவர்கள். மதுக்கூடத்தில் தனித்தனியாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தவர்கள். ஏதோ ஒரு கணத்தில் போதையின் பொருட்டு சேர்ந்துகொண்ட இவர்கள் தனிமையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.

கைதான எட்டு பேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லையென்னும்போது எப்படி ஒரு குற்றத்தில் முன்பின் தெரியாத ஆள்களோடு இணைந்து இதை செய்ய முடிகிறது? பெண்ணை தாக்குவதையும் பாலியல் அத்துமீறல்களைச் செய்யும்போதும் சிரித்துக் கூச்சலிட்ட  குற்றவாளிகள் தங்கள் செல்போன்களில் அதனை விடியோக்களாகவும் எடுத்துள்ளனர். அதில் ஒரு குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் கைப்பேசியையும் திருடிச் சென்றிருக்கிறான்.  

விடுதியில் இச்சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி இருந்தபோதும் குற்றவாளிகள் எடுத்த விடியோக்களே அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய சாட்சியமாக இருக்கிறது.

சம்பந்தப்பட்ட விடுதி இணையத்தில் ‘எங்கள் விடுதியில் சிறந்த உணவு மற்றும் தங்குமிடங்கள் உண்டு’ என்கிற விளம்பரத்தை வைத்திருக்கிறார்கள். அந்த விடுதியும் சாதாரணமாக சென்று வரக்கூடியதைப் போல் அல்லாமல் விஐபி அறைகளுடன் கூடிய வசதிகளுடனே இருக்கிறது. அப்படியான இடத்தில் இந்த வன்முறை நிகழ்ந்திருக்கிறது. அதாவது, பாதுகாப்பு அந்தத் தரத்தில் இருந்திருக்கிறது. அந்த விடுதி தரப்பிலிருந்து இச்சம்பவத்திற்கு வருத்தத்தைத் தெரிவித்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான ஆதரவைத் தருவோம் எனக் கூறியிருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளிகளுக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது. அந்நகர நீதிபதி, ‘இது முற்றிலும் இழிவான செயல்’ என பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார். 

ஒரு பிரபல வழக்கை இங்கே குறிப்பிட வேண்டும். 1989 ஆம் ஆண்டு நியூயார்க் பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார். இந்தக் குற்றத்தைச் செய்ததாக ஐந்து சிறுவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், உண்மையில் அக்குற்றத்தை அவர்கள் செய்யவில்லை. வழக்கு ஆண்டுக்கணக்காக நடக்கிறது. இறுதியில், அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் செய்யாத குற்றத்திற்கான தண்டனையையும் சமூக ரீதியான அழுத்தங்களையும் அடைந்தனர்.

‘சென்ட்ரல் பார்க் ஜாக்கர்  கேஸ் (central park jogger case)’ என்ற இந்த வழக்கு நெட்பிளிக்ஸில் ’வென் தே சீ அஸ் (when they see us)’ என்கிற பெயரில் தொடராகவும் வெளிவந்திருக்கிறது. குற்றமே செய்யாத சிறுவர்களை ஏன் கைது செய்தார்கள்? ஒரே காரணம்தான். அவர்கள் அனைவரும் கறுப்பினத்தவர்கள். அவர்கள் இதைச் செய்யக் கூடியவர்கள் என அன்றைய அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கர்களிடம் ஆழமாக நம்ப வைக்க ஒரு கூட்டம் செயல்பட்டது. 

இங்கு கவனிக்க வேண்டியது தனிமனித ஒழுக்கம், கல்வி, நாகரிகம் எல்லாவற்றிலும் உலகின் எடுத்தக்காட்டாக ஐரோப்பாவே காட்டப்படுகிறது. ஐரோப்பியர்களின் சிந்தனையே உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், 26 வயதிற்குள்ளான இளைஞர்களால் மிகக் கொடூரமான முறையில் ஸ்பெயினில் தற்போது நடத்தப்பட்ட இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இனி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும். குற்றவாளிகளில் 6 பேர் பிரான்ஸையும் இருவர் சுவிட்சர்லாந்தையும் சேர்ந்தவர்கள். அவர்கள் சார்பாக தனித்தனி வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். தப்பிக்க வைக்க ‘அப்பெண்ணின் ஒப்புதலால்தான் கூட்டு உடலுறவு நிகழ்ந்தது’ என்பதிலிருந்து வழக்கை துவங்குவார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஸ்பெயின் தண்டனைச்சட்டப்படி தலா 15 ஆண்டுகள் வரை சிறை. ஆனால், இதற்கிடையான போராட்டங்களை பிரிட்டனைச் சேர்ந்த அந்தப் பெண் எப்படி எதிர்கொள்ளப் போகிறாரோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com