'சூழ்நிலை சாதகமாக இல்லை': அமெரிக்க அழைப்பை நிராகரித்த சீனா

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை சீனா நிராகரித்திருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
'சூழ்நிலை சாதகமாக இல்லை': அமெரிக்க அழைப்பை நிராகரித்த சீனா

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை சீனா நிராகரித்திருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியதாகவும், பேச்சுவார்த்தை மற்றும் தகவல் பரிமாற்றத்துக்கான "சரியான சூழ்நிலையை" அமெரிக்கா உருவாக்கவில்லை என்பதாலும் அமெரிக்க அழைப்பை நிராகரித்துவிட்டதாக சீனா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க நடவடிக்கை, சர்வதேச விதிமுறைகளை கடுமையாக மீறியதாக உள்ளது. ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறிய சீன செய்தித் தொடர்பாளர், அமெரிக்காவின் மிக மோசமான மற்றும் மிகத் தவறான செயல்பாடு எனறும் சீனா கடுமையான விமரிசித்துள்ளது.

முன்னதாக உளவு பலூன் என்று அமெரிக்காவால் சுட்டுவீழ்த்தப்பட்ட பலூன் குறித்து செய்தியாளா்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் நேற்று கூறியதாவது:

நாங்கள் ஏற்கெனவே கூறியபடி, அமெரிக்க வான் பகுதியில் கண்டறியப்பட்ட எங்களது பலூன் ராணுவப் பயன்பாட்டுக்கானது அல்ல. அது, வானிலை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது. அது கட்டுப்பாட்டை இழந்து, வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குள் நுழைந்தது ஒரு சாதாரண விபத்தே ஆகும்.

அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது, அமெரிக்காவின் தேவையில்லாத செயலாகும். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான பிரசார யுத்தததில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.

அமெரிக்க வான் பகுதியில் பிரம்மாண்டமான சீன உளவு பலூன் கடந்த வாரம் கண்டறியப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த உளவு பலூன் அமெரிக்க வான் எல்லைக்குள் புகுந்து பல நாள்களாக சுற்றி வருவதாகவும், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பகுதிகளின் மேலே பறந்து சென்றதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையகமான பென்டகன் கூறியது.

பயணிகள் விமானங்கள் பறக்கும் உயரத்துக்கு மேலே பறந்து சென்று கொண்டிருந்த அந்த பலூன், அமெரிக்காவின் அதிநவீன மூலம் கடந்த சனிக்கிழமை சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, அந்த பலூன் வானிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டது எனவும், வழி தவறி அமெரிக்க வான் எல்லைக்குள் சென்றுவிட்டதாகவும் தெரிவித்தது.

எனினும், அந்த பலூனின் சிதறல்களை ஆய்வு செய்ததில் அது உளவு பாா்ப்பதற்காக அனுப்பப்பட்டது உறுதியானதாக அமெரிக்கா கூறியது.

சீனாவின் இந்தச் செயல் தங்கள் நாட்டின் இறையாண்மைக்கும், சா்வதேச சட்டங்களுக்கும் எதிரானது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

தங்களது இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று அந்த நாட்டு அதிபா் பைடன் செவ்வாய்க்கிழமை கடுமையாக எச்சரித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com