நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை  பற்றியபடி தந்தை

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 22 ஆயிரத்தைக் கடந்தது.
நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை  பற்றியபடி தந்தை
நிலநடுக்கத்தின் துயரக் காட்சி: இறந்த மகளின் கைகளை  பற்றியபடி தந்தை

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 22 ஆயிரத்தைக் கடந்தது.

நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  நாள் முழுக்க இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மீட்புப் படையினர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது மீட்புப் பணியில் உதவி வருகிறார்கள்.

துருக்கி முழுவதும் நிலவும் அவல நிலை தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி மனதை உருக்குவதாக உள்ளது. வலி, கவலை, துயரம், நம்பிக்கை இழந்தவர்களின் முகங்கள், மன அழுத்தத்துடன் இருப்பவர்களின் கண்ணீர்களாக பதிவாகி வருகிறது.

கட்டடங்கள் போல மனித மனங்களும் உருகுலைந்துபோயிருக்கிறது. இந்த துயரக்காட்சிகளில் ஒன்றுதான் மேஸட் ஹான்சர், 15 வயது மகளின் தந்தை. தனது இடிந்த வீட்டுக்குள் சிக்கி உயிரிழந்த தனது மகள் இர்மக்கின் கைகளைப் பற்றியபடி இரண்டு நாள்களாக உதவிக்காக காத்திருக்கும் தந்தையின் புகைப்படங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது. 

கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தாலும், அவ்விடத்தை விட்டு அகல அவர் மறுத்தபடி, தனது உயிரற்ற மகளின் கைகளைப் பற்றியபடி அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை பேசுகிறது. எத்தனையோ முறை அவரை பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்ல மீட்புப் படையினர் முயன்றும் அது வீணானதாகக் கூறப்படுகிறது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தனா்.

வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, துருக்கியில் 19,380 பேரும், சிரியாவில் 4,030 பேரும் நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனா்; இரு நாடுகளிலும் சுமாா் 85,000 போ் காயமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com