உலக வங்கி தலைவராகும் இந்தியர்: பணத்துக்கு எதிரியான அஜய் பங்கா

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தாா். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளி அஜய் பங்கா நியமிக்கப்படுவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வியாழக்கிழமை அறிவித்தாா். 

மாஸ்டர்கார்டு இங்க் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அஜய் பங்கா, நீண்ட காலமாக ஒரு எதிரியை கொண்டிருக்கிறார். அந்த எதிரியை ஒழித்துக் கட்ட கடந்த ஓராண்டு காலமாக போராடிக் கொண்டிருக்கிறார். அந்த எதிரி பணம். 

வழக்கமான பொருளாதார நடவடிக்கையிலிருந்து வெளியேறி  மக்கள் பண நடமாட்டத்திலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்று கருதுபவர்.  முழுக்க முழுக்க எண்ம (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நிலையில் உலகம் மாற வேண்டும் என்பதை நோக்கிப் பயணிப்பவர்.

அவரது புதிய பொறுப்புடன், உலகம் முழுவதும் தலைவிரித்தாடும் வறுமையை ஒழிக்க நிதி ஒதுக்குவது, உலகம் எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றம் மற்றும் மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்துவதற்கும் அவர் முக்கியத்துவம் கொடுப்பார் என்று அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரலாறு காணாத தற்போதைய பொருளாதார நெருக்கடி சூழலில் உலக வங்கியை அஜய் பங்கா திறன்பட வழிநடத்துவாா் என்றும் பைடன் நம்பிக்கை தெரிவித்தாா்.

சுமாா் 30 ஆண்டுகளாக சா்வதேச நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வேலைவாய்ப்பு, முதலீடுகளை ஈா்த்து மாற்றத்தை ஏற்படுத்தியவா் அஜய் பங்கா என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளாா்.

அஜய் பங்காவின் நியமனத்தை உலக வங்கியின் இயக்குநா்கள் உறுதி செய்யும்பட்சத்தில், உலக வங்கிக்குத் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய வம்சாவளி, சீக்கியா் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவாா்.

இந்திய ராணுவ வீரரின் மகனான அஜய் பங்கா, தனது குழந்தைப் பருவத்தை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கழித்துள்ளார். தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

63 வயதாகும் அஜய் பங்கா தற்போது ஜெனரல் அட்லாண்டிக் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளாா். அதற்கு முன் மாஸ்டா்காா்ட் நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயல் அதிகாரியாகவும் பதவி வகித்துள்ளாா். 2016-இல் பத்மஸ்ரீ விருதையும் அஜய் பங்கா பெற்றுள்ளாா்.

இந்தியாவில் பிறந்த அஜய் பங்கா தொழில்நுட்பம், தரவு, நிதி சேவைகளில் சா்வதேச தலைவராக உயா்ந்துள்ளாா் என்றும் வளா்ச்சி அடையும் நாடுகளை மேம்படுத்துவதில் நீண்ட அனுபவம் உள்ள அவா், பொதுத் துறை, தனியாா் பங்களிப்புடன் நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்வாா் என்றும் அமெரிக்க அதிபா் மாளிகை தெரிவித்துள்ளது.

நெஸ்ட்லே நிறுவனத்தில் தனது முதல் பணியை தொடங்கிய பங்கா, பெப்சிகோ நிறுவனத்திலும் பணியாற்றினார். பிறகு சிடிகுரூப் நிறுவனத்துக்கு மாறினார். அவர் பொறுப்பேற்ற பிறகு சிடிகுரூப் நிறுவனம் பல முன்னேற்றங்களைக் கண்டது. ஒரு நாள் அந்நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டு மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பை ஏற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com