டெலிகிராமில் ஹமாஸ் குழுவின் சேனல்களுக்குத் தடை!

டெலிகிராமில் ஹமாஸ் குழுவின் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
டெலிகிராமில் ஹமாஸ் குழுவின் சேனல்களுக்குத் தடை!

ஆப்பிள், கூகுள் நிறுவனங்களின் வலியுறுத்தல்களைத் தொடர்ந்து  டெலிகிராமில் ஹமாஸ் குழுவின் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக். 7 ஆம் தேதி தொடங்கிய போர் இன்று 28 ஆவது நாளாக நீடித்து வருகிறது. வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வந்த இஸ்ரேல் ராணுவம் காஸாவிற்குள் நுழைந்து தரைவழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

காஸா நகரம் முழுவதையும் சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் இன்று கூறியுள்ளது. இதனால் இஸ்ரேல் தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது. 

இந்நிலையில் கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் டெலிகிராமில் ஹமாஸ் குழுவின் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் பிரிகேட்ஸின்(Qassam Brigades) அதிகாரபூர்வ கணக்கு மற்றும் காஸா நவ்(Gaza Now) என்ற செய்தி கணக்கு ஆகியவை கடந்த வாரம் முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக டெலிகிராம் தெரிவித்துள்ளது. 

அக். 7 தாக்குதலுக்குப் பிறகு கஸ்ஸாம் பிரிகேட்ஸ் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு கணக்குகளை முறையே 5 லட்சம் மற்றும் 1 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். காஸா நவ் செய்தி கணக்கின் பின்தொடர்பவர்கள் 3.43 லட்சமாக இருந்த நிலையில், தாக்குதலுக்குப் பிறகு 19 லட்சமாக அதிகரித்துள்ளது. 

அதேநேரத்தில் கடந்த அக். 7 தாக்குதலுக்குப் பிறகு டெலிகிராம் இணையத்தில் இருந்து அதன் செயலியை பதிவிறக்கம் செய்தவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. மேலும் ஆண்ட்ராய்டு தளங்களில் மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளங்களில் செயலிகள் இயங்குகின்றன. 

இதற்கான காரணம் குறித்து டெலிகிராம் நிறுவனம் எதுவும் தெரிவிக்காவிட்டாலும் அமெரிக்காவின் சட்ட அமைப்பு ஜாச்சோர் சட்ட நிறுவனம்(Zachor Legal Institute), ஹமாஸ் கணக்குகளை சுட்டிக்காட்டி ஆப்பிள் நிறுவனத்துக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து ஹமாஸ் கணக்குகளை முடக்குமாறு ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் டெலிகிராமை வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினரின் பல்வேறு சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், டெலிகிராம் மட்டும் செயல்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் தொடர்புகொள்ள டெலிகிராம்தான் அதிகம்  பயன்படுத்தியதாகவும் அதன் மூலமாகவே அவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com