தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் புதன்கிழமை இரவு தீபாவளிப் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்
தீபாவளி கொண்டாடிய ரிஷி சுனக்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் தலைநகர் லண்டனில், டௌனிங் தெரு 10ஆம் எண் கொண்ட அந்நாட்டு பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் விளக்கு ஏற்றினர். 
இதையொட்டி பிரிட்டன் பிரதமர் இல்லம் வண்ண மலர்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இது தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:
நமக்கும் நமது குடும்பங்களுக்கும் தீபாவளி என்பது விசேஷமான தருணமாகும். என்னைப் பொருத்தவரை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பிரதமராகப் பொறுப்பேற்ற ஞாபகம் வருகிறது. 
இது கடுமையான உழைப்பு நிறைந்த ஓராண்டாகும். இப்போதைய நிகழ்வுகள் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற முறையில் ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க நான் இந்தியாவுக்குச் சென்றது முக்கியமான தருணமாகும். அங்கு இந்தியப் பிரதமர் மோடியுடன் இணைந்து உச்சி மாநாட்டில் பங்கேற்றேன். பிரதமராக கடந்த ஓராண்டில் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளேன் என்றார்.
கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாட்டம்: அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
உலகில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் தீபாவளி கொண்டாடுகிறோம். ஒளியைக் கொண்டாடும் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம். நமது உலகில் கடினமான, இருள்சூழ்ந்த தருணங்களும் உள்ளன. இஸ்ரேல் மற்றும் காஸாவில் போர் நிகழ்ந்து வருகிறது. இது நமக்கு அதிருப்தியை அளிக்கிறது.
இஸ்ரேலுக்கு தன்னைக் காத்துக் கொள்வதற்கான உரிமை அள்ளது. அந்த உரிமையை ஆதரிப்பதற்காக அதிபர் பைடனும் நானும் பாடுபட்டு வருகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதை நாம் ஆதரிக்கிறோம். காஸாவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை மீட்பது முக்கியமானதாகும். அந்தப் பிராந்தியத்தில் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்க வேண்டியுள்ளது. பாலஸ்தீனர்கள் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். அதை நாம் தொடர்ந்து ஆதரிப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com