வரி செலுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்த ஜப்பான் துணை நிதி அமைச்சர்!

வரி செலுத்தாத காரணத்தால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்தார் ஜப்பான் துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டா.
வரி செலுத்தாததால் பதவியை ராஜிநாமா செய்த ஜப்பான் துணை நிதி அமைச்சர்!

ஜப்பானின் துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டா தனது நிறுவனம் வரி செலுத்தவில்லை என்று வைக்கப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரின் ராஜிநாமா ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மற்றொரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கென்ஜி காண்டாவின் ராஜிநாமா கடிதத்தை ஜப்பான் நிதியமைச்சர் ஷுனிச்சி சுஸுகியிடம் சமர்ப்பித்ததையடுத்து, அவரின் பதவி விலகலை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. 

வரி செலுத்தாத காரணத்தால் 2013 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டும் அரசாங்கம் இவரது நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை நான்கு முறை பறிமுதல் செய்ததாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கென்ஜி காண்டோவே ஒப்புக்கொண்டார்.  

இதனையடுத்து ஜப்பானிய நிதி அமைச்சகத்தில் காண்டா பங்கு வகிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தன.

கடந்த வாரம் நாடாளுமன்ற அமர்வில் பேசிய கென்ஜி, ​​"தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிஸியாகிவிட்டதால், இந்த விவகாரங்கள் குறித்து அறியவில்லை” என்று பேசினார்.

அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கென்ஜி காண்டா வரி செலுத்தாதது, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளதாக கூறினர். அதனையடுத்து காண்டா தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஜப்பானின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான கென்டா இசுமி, துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தினார். இந்நிலையில் காண்டா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கடந்த செப்டம்பரில் தனது அமைச்சரவையை மாற்றியமைத்ததில் இருந்து ஏற்கனவே இரண்டு அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி விலகினர். தாரோ யமடாவுக்கு திருமணத்தை தாண்டிய தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து, நாடாளுமன்ற துணைக் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் சட்டத்துறைக்கான துணை அமைச்சர் மிட்டோ காகிசாவா ராஜிநாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து துணை நிதியமைச்சர் கென்ஜி காண்டாவும் பதவி விலகியுள்ளது அவரது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com