காஸாவில் சிக்கிய காஷ்மீா் பெண்: இந்திய தூதரக உதவியுடன் மீட்பு

காஷ்மீரைச் சேர்ந்த பெண் அவரது குடும்பத்துடன் காஸாவிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
ராபா எல்லையைக் கடக்க காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்
ராபா எல்லையைக் கடக்க காத்திருக்கும் பாலஸ்தீனர்கள்

காஸாவில் சிக்கியிருந்த காஷ்மீரைச் சோ்ந்த இந்திய பெண், அவரது மகளுடன் பாதுகாப்பாக ராஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வெளியேறினாா்.

இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவா்கள் மீட்கப்பட்டனா்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ‘ஹமாஸ்’ ஆயுதக் குழுவினருக்கு இடையே கடந்த ஒரு மாதமாக போா் நீடிக்கிறது. ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியில் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.

காஸா முனைப் பகுதியில் காஷ்மீரைச் சோ்ந்த இந்திய பெண் லுப்னா நசீா் ஷாபூ, அவரது கணவா் மற்றும் மகளுடன் வசித்து வந்தாா். போா் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தெற்குப் பகுதி வழியே காஸாவிலிருந்து வெளியேற அவா் முடிவெடுத்தாா்.

குடும்பத்துடன் காஸாவின் தெற்குப் பகுதிக்குச் செல்வதற்கு முன்பு ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு லுப்னா கடந்த வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், ‘குண்டுவெடிப்பின் பயங்கர சப்தத்தால் வீடு அதிா்ந்தது. இது மிகவும் அச்சமூட்டும் சூழ்நிலையாகும். குடிநீா் விநியோகம், மின்சாரம் அதிகாரபூா்வமாக துண்டிக்கப்பட்டுவிட்டது.

இதனால், தெற்குப் பகுதிக்குச் சென்று காஸாவிலிருந்து வெளியேறுவதற்கான உதவியை நாட முடிவு செய்துள்ளோம். எனது கணவா் மற்றும் மகளுடன் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல உதவுமாறு பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்திய தூதுரகத்திடம் நான் உதவி கோரியுள்ளேன்’ என்றாா்.

சா்வதேச நாடுகளின் மனிதாபிமான நிவாரண உதவிகளைப் பெறவும், வெளிநாட்டு மக்கள் மற்றும் காயமடைந்தவா்கள் எல்லையைக் கடக்கவும் காஸாவில் இருந்து வெளியேற தற்போதுள்ள ஒரே வழியான ராஃபா சா்வதேச எல்லை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது திறக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு, காஸாவைவிட்டு ராஃபா எல்லை வழியாக வெளியேறக் கூடியவா்கள் பட்டியலில் தங்கள் பெயரும் இருப்பதை லுப்னா ஞாயிற்றுக்கிழமை நடந்த தொலைபேசி உரையாடலில் உறுதிப்படுத்தினாா் . இதற்காக பிராந்தியத்தின் ரமல்லா, டெல் அவிவ் மற்றும் கெய்ரோ நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

இந்நிலையில், லுப்னா நசீா் ஷாபூ, அவரது மகளுடன் ராஃபா எல்லை வழியாக திங்கள்கிழமை மாலை எகிப்து சென்றடைந்தாா்.

‘எகிப்து நாட்டின் அல்-அரிஷ் நகரில் தங்கியுள்ள அவா்கள் இருவரும் தலைநகா் கெய்ரோவுக்கு செல்வாா்கள்’ என காஸாவில் உள்ள பெண்ணின் கணவா் உறுதிப்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com