அணு ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் அமைச்சர் கருத்து : அரபு நாடுகள் கண்டனம்!

போரில் அணு ஆய்தங்கள் பயன்படுத்துவது குறித்த இஸ்ரேல் அமைச்சரின் கருத்துக்கு ஐ.நா. மாநாட்டில் சீனா மற்றும் அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 
அணு ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் அமைச்சர் கருத்து : அரபு நாடுகள் கண்டனம்!

காஸா மீது அணுகுண்டு தாக்குதல் தொடர்பான இஸ்ரேல் அமைச்சரின் கருத்துக்கு சீனா, ஈரான் மற்றும் அரபு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அணு ஆயுதங்களை இந்தப் போரில் பயன்படுத்துவது தொடர்பான அவரது விருப்பம் இந்த உலகிற்கு ஆபத்தை அளிக்கக்கூடியது என மற்ற நாடுகள் தெரிவித்துள்ளன. 

வெகுநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மாநாட்டின் தொடக்கம் கடந்த திங்கள் கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து நாட்டுத் தூதர்களும், இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் எலியாஹுவின் கருத்துக்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். ஐ.நா.வின் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று அணு ஆயுதங்கள் இல்லாத மத்திய கிழக்கை உருவாக்குவது. 

காஸா மக்கள் பாலைவனப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும், இல்லையென்றால் அணுகுண்டு வீசப்படும் என எலியாஹு தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனே அவரது கருத்துக்களை நிராகரித்து, அவரை அனைத்து அமைச்சரவைக் கூட்டங்களிலிருந்தும் இடை நீக்கம் செய்திருந்தார். 

இஸ்ரேல் இதுவரை தன் அணு ஆயுத இருப்பையோ திறனையோ உறுதிப்படுத்தியதுமில்லை, மறுத்ததுமில்லை. ஆனால் இஸ்ரேல் அணு ஆயுதங்களைக் கட்டாயம் வைத்துள்ளது எனப் பரவலாக நம்பப்படுகிறது. மேலும் 1986ல் இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டத்தினைப் பற்றிய தகவல்களை பிரிட்டிஷ் ஊடகத்திற்கு அளித்த குற்றத்திற்காக இஸ்ரேலின் அணு உலை ஒன்றின் ஊழியர் ஒருவர் 18 ஆண்டுகள் சிறையலடைக்கப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது. 

இஸ்ரேல் அமைச்சரின் இந்தக் கருந்து பெய்ஜிங்கிற்கு அதிர்ச்சியளிப்பதாக சீனாவின் துணைத் தூதரான கெங் சுவாங் தெரிவித்துள்ளார். இது மிகுந்தக் கவலையையும் மன உளைச்சலையும் தருவதாகக் கூறினார். 

மேலும் பேசிய அவர், இஸ்ரேல் அந்தக் கருத்தை உடனே திரும்பப்பெற்று அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைந்து அணு ஆயுதங்கள் அல்லாத நாடாக மாற வேண்டும் எனப் பரிந்துரைத்தார். மத்தியக் கிழக்கை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட சீனாத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இப்போது இருக்கும் அபாயகரமான சூழலில் இதை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் திங்கள் கிழமையின் நான்காவது மாநாட்டைத் துவங்கி வைத்த ஐ.நா.வின் ஆயுதக் குறைப்புப் பிரிவின் தலைவர் இசுமி நகிமிட்சு, இஸ்ரேலைக் குறிப்பிடாமல், எந்த நாடும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், மத்தியக் கிழக்கை அணு ஆயுதம் மற்றும் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இல்லாத பகுதியாக உருவாக்குவது மிக முக்கியம் எனவும் வலியுறுத்தினார். மேலும் இரு மாநிலத் தீர்வின் அடிப்படையில் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சவுதி அரேபியா உள்ளிட்ட ஆறு அரபு நாடுகளின் சார்பில் பேசிய ஓமன் நாட்டுத் தூதர் முகமது அல்-ஹசான், 'அணு ஆயுதங்கள் பற்றி பரிசீலிக்கும் இஸ்ரேலின் போக்கு அப்பாவி மக்களின் மேல் அந்நாடு கொண்டுள்ள அலட்சியத்தைக் காட்டுகிறது. மேலும் பாலஸ்தீன மக்களிடம் அத்துமீறி ஆக்கிரமிக்கும் கொடூரத்தையும் இது உறுதியாக்குகிறது' எனத் தெரிவித்தார். 

ஈரான் தூதர் அமிர் இரவானி, 'பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர் இப்படி அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்துப் பேசுவது, இஸ்ரேல் அணு ஆயுதங்கள் வைத்துக்கொள்வதை பெருமையாகக் கருதுவதைக் காட்டுகிறது' எனக் கூறினார். 

மேலும் அணு ஆயுதங்களுடன் ஈராக் இருக்குமாயின் அதுவே இஸ்ரேலுக்கு மிகப்பெரிய அச்சுருத்தலாக இருக்கும் என இஸ்ரேல் பிரதமர், தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com