அயர்லாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு கத்திக்குத்து : கலவரம் மூண்டதால் பதற்றம்!

அயர்லாந்தில் பள்ளி குழந்தைகளுக்கு கத்திக்குத்து : கலவரம் மூண்டதால் பதற்றம்!

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் பள்ளி குழந்தைகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது.  

லண்டன் : அயர்லாந்து தலைநகர் டப்ளினில்,  பள்ளி குழந்தைகளை குறிவைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டப்ளினில்  மக்கள் நெருக்கடி மிகுந்து காணப்படும் பர்னல் சதுக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் அருகே, வியாழக்கிழமை (நவ.23), கையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் ஒருவர், அங்கிருந்த குழந்தைகளை கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அதில், 5 வயது சிறுமி ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில், 30 வயதான பெண்மணி ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.மேலும், 5 வயது சிறுவன் மற்றும் 6 வயது சிறுமி ஆகியோருக்கும் கத்திக்குத்தின்போது  லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக செயல்பட்டு அந்த நபரின் கையில் இருந்த கத்தியை பறித்துள்ளனர், தற்போது, அந்த நபர் கைது செயப்பட்டு அவரிடம்  விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சிறுமி கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து டப்ளினில் கலவரம் வெடித்துள்ளது. டப்ளின் நகரில் 100க்கும் மேற்பட்டோர் கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் வீதிகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர்.  

அவர்கள் கடைகளின் வெளியே இருந்த நாற்காலிகள் உட்பட கையில் கிடைத்த பொருட்களை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். காவல்துறை வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.  சில கடைகள் சூறையாடப்பட்டன.  இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத்தொடர்ந்து, கலவரத்தை கட்டுப்படுத்த 400க்கும் அதிகமான காவலர்கள் டப்ளின் நகரம் முழுவதும் குவிக்கப்பட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர். மேலும், அயர்லாந்து நாடாளுமன்றம் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக டப்ளினில்  பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பணியாளர்கள் யாரும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாமெனவும், தங்கள் வீடுகளில் இருந்தபடியே பணியற்றும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தவறான வதந்திகளை நம்பி, யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாமென்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கத்திக்குத்து சம்பவத்துக்கும், நகரில் ஏற்பட்டுள்ள கலவரத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்துக்கு பின்புலத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பில்லையெனவும், கலவரத்துக்கான காரணம் என்ன என்பது  குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com