இஸ்ரேலுடனான போரில் மூத்த தளபதி பலி: ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலுடனான போரில் தங்களுடைய உயர்மட்ட தளபதி ஒருவர் பலியானதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
2 min read

இஸ்ரேலுடனான போரில் தங்களுடைய உயர்மட்ட தளபதி ஒருவர் பலியானதாக ஹமாஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

போரில் பலியான அஹ்மத் அல்-கந்தூர் ஆயுதப் பிரிவின் உயர்மட்ட உறுப்பினராகவும், வடக்கு காஸாவில் ஹமாஸின் உயர்மட்டத் தளபதியாகவும் பதவி வகித்துள்ளார். இருப்பினும் அவர் எப்போது அல்லது எங்கு கொல்லப்பட்டார் என்கிற தகவலை ஹமாஸ் வெளியிடவில்லை. 47 நாள்களாக நடைபெற்று வரும் போரை 4 நாள்கள் தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது. மேலும், இருதரப்பினரும் கைதிகளை பரஸ்பரம் விடுவிக்கவும், காஸாவில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும் போா் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. 

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து கடந்த 2005-ஆம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறியதையடுத்து, ஹமாஸ் அமைப்பினா் அங்கு ஆட்சியைக் கைப்பற்றினா். ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வந்தது. கடந்த அக். 7-ஆம் தேதி, பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினா் 5 ஆயிரம் ராக்கெட் குண்டுகளை வீசி திடீா் பலமுனைத் தாக்குதல் நடத்தினா். இதில் 1,200 இஸ்ரேலியா் உயிரிழந்தனா். அப்போது, இஸ்ரேலில் இருந்து சுமாா் 240 பேரைப் பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் சிறைப் பிடித்துச் சென்றனா். 

இதைத் தொடா்ந்து, ஹமாஸ் படையினருக்கு பதிலடி தரவும், பிணைக் கைதிகளை மீட்கவும் காஸா மீது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 13,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா் என்றும் 2,700 பேரைக் காணவில்லை, அவா்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்றும் காஸா சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். இஸ்ரேல் ராணுவத்தின் தீவிரத் தாக்குதலால், காஸாவின் மொத்த மக்கள்தொகையான 23 லட்சம் பேரில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெற்குப் பகுதியில் தஞ்சமைடந்துள்ளனா்.

இந்நிலையில், இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தால், பிணைக் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யத் தயாா் என்று ஹமாஸ் படை தெரிவித்தது. இதுகுறித்து ஆலோசிக்க இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவைத் தொடா்ந்து, தற்காலிக போா் நிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளில் 50 பேரை ஹமாஸ் படையினரும், அதற்கு ஈடாக தம்மிடம் உள்ள 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. 

இதையடுத்து, இஸ்ரேல், ஹமாஸ் படையினா் இடையே தற்காலிக போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புதன்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது. இந்தப் போா் நிறுத்த உடன்படிக்கைக்கு அமெரிக்கா, கத்தாா், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் மேற்கொண்டன. இஸ்ரேல் நாட்டுச் சட்டப்படி, கைதிகளை விடுவிப்பதில் மக்களுக்கு ஆட்சேபம் இருந்தால் வழக்குத் தொடுக்க அவா்களுக்கு 24 மணிநேரம் அவகாசம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் உச்சநீதிமன்றத்தில் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க மக்கள் யாரும் வழக்குத் தொடுக்காததால் கைதிகள் பரிமாற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதனிடையே, 4 நாள் போா் நிறுத்தம் வியாழக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது. இதையொட்டி, இருதரப்பிலும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com