ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச்சுக்கு புக்கர் பரிசு !

உலகப் புகழ் பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார்.
பாசிஸத்தின் குரூரம்... நாவலுடன் பால் லிஞ்ச்!
பாசிஸத்தின் குரூரம்... நாவலுடன் பால் லிஞ்ச்!

உலகப் புகழ் பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார்.

பால் லிஞ்ச் எழுதிய ப்ராபெட் ஸாங் (Prophet Song - தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

சர்வாதிகாரம் மற்றும் போரில் சிக்கிக் குலைந்த அயர்லாந்தில் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றிய ஆன்மாவை உலுக்குகிற நாவல் இது என்று புக்கர் பரிசுக்கான தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சில் புக்கர் விருதுடன் பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்ட்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 லட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு புக்கர் பரிசு பெற்ற ஷேகன் கருணதிலகவிடமிருந்து டிராபியை பால் லிஞ்ச் பெற்றுக்கொண்டார்.

மொத்தம் 163 நாவல்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு 6 நாவல்கள் தெரிவு செய்யப்பட்டன. இந்த நாவல்களிலிருந்து விருதுக்காக பால் லிஞ்ச்சின் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவருடைய 5-வது நாவல் இது.

இந்த நாவலை எழுத, 2018 தொடக்கம் 4 ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாக பால் லிஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாவலைப் பற்றி எழுத்தாளரும் தேர்ந்த வாசகரும் விமர்சகருமான சரவணன் மாணிக்கவாசகம் தம் முகநூல் பதிவில் கூறுகிறார்:

“சிக்கலான பருப்பொருட்களை நாவலுக்கு எடுத்துக் கொள்பவர் பால் லிஞ்ச்.  இதுவரை ஏராளமான விருதுகளை வென்ற, ஐந்து நாவல்களை எழுதியுள்ள, இவரது இந்த ஐந்தாவது நாவல் இது.

சிலநேரங்களில் பத்து அல்லது இருபது வருடங்கள் முன்பு படித்த நாவலை மீண்டும் எடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வரை, முன்னர் படித்தது நினைவில் இருப்பதில்லை. சில நாவல்கள் எல்லாம் ஐம்பது, அறுபது பக்கங்கள் வாசித்த பிறகே தெரிந்திருக்கிறது. ஆனால் ப்ராபெட் ஸாங் போன்ற நாவல்களை எளிதாக மறப்பதற்கு இயலாது. படித்து முடித்து அதிர்ச்சியில் உறைந்திருந்தது நெடுங்காலம் நினைவிருக்கும்.

“History is a silent record of people who did not know when to leave.”. நாவலில் வருகின்ற ஒரு வரி இது. பாதுகாப்பான சூழலில் வாழும் நம்மைவிட, ஈழத்துச் சகோதரர்கள் இந்த வரியின் வலிமையை அறிந்துகொள்வார்கள். அயர்லாந்தில் பாசிஸம் தன் ஆக்டோபஸ் கைகளினால் எல்லோரையும் இறுக்கத் தொடங்குகிறது. யூனியன் லீடரான கணவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவன் எங்கு இருக்கிறான் என்பதே மாதங்கள் கடந்தும் தெரியவில்லை. பதினேழு வயது மகன் பாசிஸத்தை எதிர்க்க வீட்டைவிட்டு ஓடிப் போராளிகளுடன் இணைகிறான். பதினான்கு வயதுப் பெண் உட்பட, மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு உணவு, மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கும் வழியின்றி எந்நேரமும் கொல்லப்படலாம் என்ற பயத்தில் மனைவியின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. மெல்வில், தாஸ்தயேவ்ஸ்கி, கான்ராட், ஃபாக்னர் போன்ற எழுத்தாளர்களால் தூண்டுதல் பெற்றவர் பால். அவருடைய பத்து வயதுக்குள் ஹார்டி பாய்ஸ் வரிசையின் எண்பத்தைந்து நூல்களையும் வாசித்தவர்.

தொடர் வாசிப்பில் இருப்பவர். இந்த நாவலை எழுத ஆரம்பித்தபோது மகன் பிறந்ததாகவும், முடிக்கையில் அவன் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதாகவும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இதற்கு முன் இந்த நாவலை எழுத ஆறு மாதங்கள் முயற்சித்து அந்தப் பிரதி சரியாக வரவில்லை என்று கைவிட்டார்.

Dystopian நாவல்கள் எல்லாமே வாசிப்பதற்குக் கடினமானவை. பால்  இடைவெளி விடாது அழுத்தத்தை அதிகப்படுத்திக்கொண்டே போகிறார். பாசிஸம் ஆரம்பிப்பதில் இருந்து அதன் உச்சத்தை அடையும் வரையான தகவல்கள் நாவலில் வருகின்றன. அயர்லாந்து என்ற பெயரை எடுத்துவிட்டால் எந்த நாட்டிற்கும் பொருந்தும் நாவல். இவ்வாண்டு வாசித்த சிறந்த பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.”

இறுதிச் சுற்றுக்கு வந்த நாவல்கள்!
இறுதிச் சுற்றுக்கு வந்த நாவல்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com