யோகா குரு பாலியல் குற்றச்சாட்டில் கைது!

யோகப் பயிற்சி என்கிற பெயரில் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யோகா குரு பாலியல் குற்றச்சாட்டில் கைது!

பாரிஸ்: பன்னாட்டு தாந்திரீக யோகா அமைப்பின் தலைவர் மீது பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், யோகா குரு கிரிகோரியன் பிவோலரு. ரோமானியாவைச் சேர்ந்த 71 வயதான இவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படும் ஆத்மன் யோகா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கிரிகோரியன், சர்வதேச அளவில் அறியப்பட்ட யோகப் பயிற்சியாளர் மற்றும் புத்தக ஆசிரியர்.

ஆத்மன் யோகா கூட்டமைப்பு, இங்கிலாந்தின் பல இடங்களில் யோகப் பயிற்சிகளையும் யோகா ஆசிரியருக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறது.

‘ஆற்றலை நோக்கிய ஆன்மிக ஒருங்கிணைப்புக்கான பயிற்சியை’ அளிப்பதாகக் குறிப்பிடும் இந்த அமைப்பு, உளவியல்ரீதியாக பயிற்சியில் பங்கேற்கும் பெண்களைத் தவறாகக் கையாள்வதாகவும் அவர்கள் மீது பாலியல் சுரண்டல் மேற்கொள்வதாகவும் பெண் உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆள் கடத்தல், ஒருங்கிணைந்த கடத்தல் செயல், பாலியல் வன்முறை மற்றும் பலவீனமானவர்கள் மீது ஒருங்கிணைந்த முறைகேட்டைச் செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

சர்வதேச காவல் துறை ரெட் நோட்டீஸ் பிறப்பித்ததன் அடிப்படையில், பின்லாந்து சார்பிலும் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆத்மன் இணையதளம், கிரிகோரியன் மீதான இந்த நடவடிக்கையைச் சதி எனக் குறிப்பிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, பிரான்ஸின் தலைநகரில் மூன்று வெவ்வேறு இடங்களில் 175 காவல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பின் பயிற்சி மையங்களில் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பாலியல் செயல்களுக்கு வற்புறுத்தப்பட்டுள்ளனர். ஆஷ்ரமங்கள் என்கிற பெயரில் நடத்தப்பட்ட மையங்களில் இவை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் மாணவிகள் உள்பட பல பெண்களைப் பண ஆதாயத்துக்காக பாலியல் விடியோக்களில் பங்கெடுக்க வற்புறுத்தியதும் யோகப் பயிற்சி என்கிற பெயரில் ஒருங்கிணைந்த குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, இவர் மீது ரோமானியாவில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு 1990-ல் பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com