அன்று கல்லூரி தேர்வில் தோல்வி.. இன்று வேதியியலில் நோபல்

கல்லூரியின் முதல் பருவத் தேர்வில் வேதியியல் பாடத்தில் நான் தோல்வியடைந்தேன். அது என்னை பெரிதாக பாதித்திருக்கலாம் என்றார் நோபல் வெற்றியாளர் மௌங்கி பவென்டி.
அன்று கல்லூரி தேர்வில் தோல்வி.. இன்று வேதியியலில் நோபல்
Published on
Updated on
2 min read


கல்லூரியின் முதல் பருவத் தேர்வில் வேதியியல் பாடத்தில் நான் தோல்வியடைந்தேன். அது என்னை பெரிதாக பாதித்திருக்கலாம் என்று இளைஞர்களுக்கு தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் நோபல் வெற்றியாளர் மௌங்கி பவென்டி.

நுண் குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புக்காக நடப்பாண்டில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் மெளங்கி பவென்டி, கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லூயிஸ் புரூஸ், நியூயாா்க்கில் செயல்படும் நானோகிரிஸ்டல்ஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் அலெக்ஸி எகிமோவ் ஆகியோா் இப்பரிசை வென்றுள்ளனா்.

இவர்களில் 62 வயதாகும் மௌங்கி பவென்டி, எம்ஐடி பேராசிரியராக இருக்கிறார். இவர் தனது இளமைக்கால அனுபவங்களை ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் தனது இளநிலை கல்லூரி படிப்பின்போது, முதல் வேதியியல் தேர்வில் தான் தோல்வியை சந்தித்ததாகவும், அது என்னை அன்றே மூழ்கடித்துவிட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

துனிசிய மற்றும் பிரெஞ்சு பாரம்பரியத்தை உடைய மௌங்கி, தனது பள்ளிப் படிப்பு வரை எளிதாகவே அறிவியல் பாடங்களைப் படித்து வந்துள்ளார். ஆனால், 1970ஆம் ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஹார்வேர்டு பல்கலையில் சேர்ந்ததும், திடீரென ஒரு அச்சம் தொற்றிக்கொண்டது.
 
நான் தேர்வுகளுக்கு படிக்காமல் இருந்தேன். அப்போது, அவ்வளவு பெரிய கல்லூரி மற்றும் பேராசிரியர்களைப் பார்த்து நான் மிரண்டுபோயிருந்தேன்.

முதல் வேதியியல் தேர்வெழுதியது இன்னமும் நினைவிருக்கிறது. முதல் கேள்வியைப் பார்க்கிறேன்.. பதில் தெரியவில்லை. இரண்டாவது கேள்வியைப் பார்க்கிறேன்.. அதேதான். அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இறுதியாக அந்தத் தேர்வில் 100க்கு 20 மதிப்பெண்கள் எடுத்து வகுப்பிலேயே கடைசி மதிப்பெண் எடுத்த மாணவராக அறியப்பட்டேன்.

அப்போது நான் நினைத்தது இதுதான், அடக்கடவுளே.. என் கதை முடிந்துவிட்டது, நான் இங்கே என்ன செய்யப்போகிறேன்? என்றுதான். 

ஆனால், பிறகு பவென்டி வேதியியலை காதலிக்கக் கற்றுக்கொண்டார், அதோடு தேர்வுகளுக்குத் தயாராகும் கலையையும் அறிந்துகொண்டார். உடனடியாக தன்னை சரி செய்யும் பணியைத் தொடங்கிவிட்டிருந்தார்.

எப்படி படிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அதுவரை அது பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன்பிறகு நான் அனைத்திலும் 100 மதிப்பெண்கள் எடுத்தேன். 

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி இளைஞர்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான், விடாமுயற்சி.. மற்றும் எந்த தோல்வியும் உங்களை அழிக்க விட்டுவிடாதீர்கள் என்பதுவே அது. ஏனெனில் நான் சந்தித்த முதல் தோல்வி அது. அது என்னை மூழ்கடித்துவிட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நான் விட்டுவிடவில்லை என்று கூறியிருக்கிறார்.

பிரான்ஸை பூா்விகமாகக் கொண்ட மௌங்கி பவென்டியின் தந்தை அந்நாட்டின் புகழ்பெற்ற கணிதமேதையாகத் திகழ்ந்தவா். சிறுவயதிலேயே இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயா்ந்தது. ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் படித்த அவா், மஸாசுசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக்கத்தில் பேராசியராக உள்ளாா். பவென்டி வேதியியல் ஆய்வு நிறுவனத்தையும் நடத்தி வருகிறாா்.

குவாண்டம் புள்ளிகள் என்பவை சில அணுக்களின் விட்ட அளவைக் கொண்ட நுண்ணிய கூறுகளாகும். மிகப் பிரகாசமான வண்ண ஒளியை வெளியிடும் இப்புள்ளிகள், மின்னணுவியல் மற்றும் மருத்துவப் படிமவியலில் பயன்படுகின்றன. அசாதாரணமான மற்றும் ஈா்ப்புடைய பண்புகளைப் பெற்றிருப்பதோடு, தங்களின் அளவுக்கு ஏற்ப வண்ணங்களைக் கொண்டுள்ளன.

நானோ தொழில்நுட்பத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள குவாண்டம் புள்ளிகளின் கண்டுபிடிப்பு மற்றும் தொகுப்புப் பணிகளுக்காக மேற்கண்ட விஞ்ஞானிகள் கெளரவிக்கப்பட்டுள்ளனா். இப்போது குவாண்டம் ஒளி உமிழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் கணினித் திரைகள், எல்இடி விளக்குகளில் இருந்து இவை ஒளியைப் பரப்புகின்றன. வேதியியல் வினைகளைத் தூண்டவும், அறுவை சிகிச்சைகளின்போது கட்டித் திசுக்களை அகற்ற மருத்துவருக்கு வழிகாட்டவும் இப்புள்ளிகள் பயன்படுகின்றன. இதன்மூலம் மனிதகுலத்துக்கு மிகச் சிறந்த பலன்களைக் கொண்டுவந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com