இஸ்ரேலில் அவசரநிலை! இருளில் மூழ்கியது காஸா!!

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதி முழுவதும் மின்சாரப் பற்றாக்குறையால் இருளில் மூழ்கியது. 
இஸ்ரேலில் அவசரநிலை! இருளில் மூழ்கியது காஸா!!


இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதி முழுவதும் மின்சாரப் பற்றாக்குறையால் இருளில் மூழ்கியது. மருந்து பொருள்களின் பற்றாக்குறையால் மருத்துவமனைக்குக் காயமடைந்தவர்களைக் கொண்டு வந்தாலும் சிகிச்சை அளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் 2100 உயிர்களுக்கு மேலாகப் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஸா பகுதியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் குழுவினர், கடந்த வாரத்தின் இறுதியில் மேற்கொண்ட எதிர்பாராத தாக்குதலில் தொடங்கிய சண்டை, போராக மாற அதிக நேரம் எடுக்கவில்லை.

இதுவரை இஸ்ரேல் தரப்பில் 155 ராணுவத்தினர் உட்பட 1200 பேர் இறந்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது. காஸா அமைச்சரவை, இறப்பு எண்ணிக்கை 950 என்றும் காயமடைந்தவர்கள் 5000-க்கும் மேல் எனவும் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 2,50,000 பேர் வீடுகள் இழந்து அகதிகளாக மாறியுள்ளனர்.

5-வது நாளாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீன் போரில் நடைபெறுவது என்ன?

எகிப்து எல்லை முடக்கம்

எகிப்துக்கும் காஸா பகுதிக்கும் இடைப்பட்ட ராஃபா எல்லை இருபக்கமிருந்தும் மூடப்பட்டு உள்ளது என எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். எகிப்தில் இருந்து  எரிபொருள், கட்டட பொருள்கள் மற்றும் உணவு பொருள்களை ஏற்றிவந்த சரக்கு வாகனங்கள் காஸா பகுதிக்குள் நுழைய இயலாமல் ராஃபா எல்லையில் வரிசையாக நிற்கின்றன. அதே வேளையில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன் குடும்பங்கள் எகிப்தின் அரிஸ் பகுதியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பணவீக்கம் கட்டுக்குள்தான் இருக்கிறது: ஜேனட் எலன்

அமெரிக்க கருவூல செயலாளர் ஜேனட் எலன், அமெரிக்க பொருளாதார நிகழ்வுகளில் கூடுதல் கவனம் பெறக் கூடிய ஒன்றாக இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் இருப்பினும் பொருளாதார மந்தநிலை ஏற்படுத்தும் அளவுக்கு பணவீக்கம் அதிகரிக்காது என நம்பிக்கை தெரித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

போர் ஆரம்பித்து சில நாள்களிலேயே உலக பொருளாதார வளர்ச்சியில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சொல்வது கடினம் என்கிறார், பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார அறிஞர் பியாரே ஆலிவர். 

ஹாங்காங் - இஸ்ரேல் விமான சேவை நிறுத்தம் 

ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து இஸ்ரேல் டெல் அவிவ் செல்லும் விமானங்கள் அக்.29 வரை நிறுத்தப்பட்டுள்ளன.

காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல்:

காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம், ஹமாஸ் குழுவினருக்கான பயிற்சி முகாமாகவும் ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான இடமாகவும் இருந்ததாக  இஸ்ரேலிய உளவுத் துறை கருதியது. அதனால் இந்தப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்:

லெபனான் தீவிரவாத குழுவான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய ராணுவத் தளத்தின் மீது ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் அதிகளவில் இருக்கலாம் என ஹிஸ்புல்லா தரப்பில் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதிகளில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் கருவிகள் தாக்கின என்பதைத் தவிர வேறு எதையும் இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிடவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கள் குழுவைச் சேர்ந்த மூவரைத் தாக்கியதற்கு பழிவாங்கவே இந்தத் தாக்குதல் எனக் குறிப்பிடுகிறது ஹிஸ்புல்லா. ஈரானைச் சேர்ந்த தீவிரவாத குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீன் சார்பில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டாலும் அதிகாரபூர்வமாகப் போரில் இணையவில்லை.

ஸ்பெயின் முதற்கட்டமாக 200 பேரை மீட்டது

இஸ்ரேல் பகுதியில் சிக்கிக் கொண்டிருந்த ஸ்பெயின் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த 200 பேரை முதற்கட்டமாக மீட்டிருக்கிறது ஸ்பெயின். டெல் அவிவ் நகரத்தில் சிக்கியிருப்பவர்களை அழைத்து வர அடுத்த விமானம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது ஸ்பெயின் பாதுகாப்பு ஆணையம்.

இருளில் மூழ்கிய காஸா:

காஸா பகுதிக்கு மின்சாரம் வழங்கும் ஆற்றல் மையத்தில் மின்சார இருப்பு தீர்ந்ததால் மின்சாரம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.

இஸ்ரேல் திட்டமிட்டப்படியே காஸா பகுதிக்குள் செல்லும் உணவு, மின்சாரம், எரிபொருள் எல்லாமும் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள், குடியிருப்புகள் என எந்தப் பகுதியிலும் ஜெனரேட்டர் உள்ளிட்ட எதுவும் வேலை செய்யாது. 

பிற்பகலுக்கு மேல் மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுவிடும் எனக் கூறப்பட்ட நிலையில், மாலையிலிருந்து மின்சாரம் முழுவதும் தடைப்பட்டுள்ளது.

 
இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்க முடியாத நிலை:

தொடர்ச்சியாக வானில் இருந்து வெடிகுண்டு மழை பொழிந்து கொண்டெ இருக்கிற வேளையில் கட்டடக் குவியலுக்கிடையில் சிக்கிய மனிதர்களை மீட்கப் போதுமான கருவிகளும் ஆட்களுமின்றி ஒட்டுமொத்த நகரமும் திகைத்து நிற்கிறது. 

எல்லா பக்கமும் சாலைகள், பாலங்கள் சேதமடைந்திருப்பதால் மீட்பு வாகனங்களாலும் அவசர ஊர்திகளாலும் பாதிப்படைந்த பகுதிக்குச் செல்ல இயலாத நிலை நீடிக்கிறது.

தாய்லாந்து மக்கள் பலி எண்ணிக்கை:

தாய்லாந்தைச் சேர்ந்த 20 பேர் பயத்தினால் இறந்திருக்கின்றனர். 13 பேர் காயமடைந்துள்ளனர், 14 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்கிறார் அந்த நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர்.
 
30,000-க்கும் அதிகமான தாய்லாந்து வாசிகள் இங்கு பண்ணை வேலை போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இதுவரை 5,019 பேர் வெளியேற விண்ணப்பித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலில் அவசர நிலை

இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, எதிர்க்கட்சித் தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com