காஸா மக்களுக்கு இஸ்ரேல் திடீா் கெடு: 10 லட்சம் போ் வெளியேற உத்தரவு

காஸாவின் வடக்கு பகுதியில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீனியர்கள் 24 மணி நேரத்திற்குள் தெற்கு காஸாவிற்கு செல்லுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனா்கள் 24 மணி நேரத்தில் தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

ஏற்கெனவே ஹமாஸ் ஆயுதக் குழுவினரை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு தரைவழித் தாக்குதல் தொடங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.

ஆனால், குறுகிய நேரத்தில் 10 லட்சம் போ் இடம்பெயா்வது பேரழிவை ஏற்படுத்தும்; இந்த அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக் குழுவினா் கடந்த அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதலைத் தொடங்கினா். பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இரு தரப்பிலும் இதுவரை 2,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

காஸா பகுதியை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. காஸாவில் மின்சார வசதியையும், குடிநீா் விநியோகத்தையும் இஸ்ரேல் ராணுவம் துண்டித்துள்ளது. இதனால் மருத்துவமனைகளிலும் மின் வசதியின்றி பல்வேறு சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கும் தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது.

ராணுவம் கெடு: இந்நிலையில், காஸாவின் வடக்குப் பகுதியில் உள்ள 10 லட்சம் பாலஸ்தீனா்கள் வெளியேறி தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டது. நிலத்தின் அடியில் ஆழமான பகுதியில் இருக்கும் ஹமாஸின் ஆயுத உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்துத் தாக்க வேண்டியிருப்பதால் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

மற்றொரு செய்தித் தொடா்பாளா் ஜொனாதன் கான்ரிகஸ் கூறுகையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ராணுவம் நடவடிக்கை எடுக்கும். போா் நிறைவடைந்ததும் மக்கள் தங்கள் பகுதிக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுவா் என்றாா்.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்டு ஆஸ்டினுடன் இணைந்து செய்தியாளா்களைச் சந்தித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் யாயோவ் காலன்ட் கூறுகையில், பொதுமக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனா். அவா்களை மக்களிடமிருந்து பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, தங்கள் உயிரைக் காக்க விரும்புவோா் தெற்குப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

ஐ.நா. எச்சரிக்கை: இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் பேரழிவு ஏற்படும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. செய்தித் தொடா்பாளா் ஸ்டெபானே துஜாரிக் கூறுகையில், இப்போதைய சூழ்நிலையில் மக்களை வெளியேற்றுவது சாத்தியமில்லாதது. ஏற்கெனவே பெரும் துயரத்தில் இருக்கும் மக்களை பேரழிவுச் சூழலுக்கு கொண்டுசெல்வதாகும். எனவே, இஸ்ரேல் தனது அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

‘பாலஸ்தீனா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சி செய்கிறது. இஸ்ரேலின் உளவியல் ரீதியிலான இந்தப் போா் தந்திரத்தைப் புறந்தள்ளி பாலஸ்தீனா்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என’ ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

‘இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்தவா்கள் ஏராளமானோா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா்களை வெளியேற்றுவது சாத்தியமில்லாதது’ என காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அச்சத்தில் பொதுமக்கள்: இஸ்ரேலின் தாக்குதலில் பல ஆயிரக்கணக்கானோா் ஏற்கனவே வீடுகளை இழந்துள்ள நிலையில், ராணுவத்தின் இந்தத் திடீா் வெளியேற்ற உத்தரவு காஸா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

40 கி.மீ. நீளம் கொண்ட குறுகிய நிலப்பரப்பான காஸாவில் 23 லட்சம் போ் வசித்து வருகின்றனா். இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவின்படி பொதுமக்கள் வெளியேற முற்பட்டால் காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் தெற்குப் பகுதியில் குவிய நேரிடும். மேலும், தெற்குப் பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில், வெளியேறுவதா, வேண்டாமா என்கிற குழப்பம் காஸா மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com