பிணைக் கைதியின் விடியோவை வெளியிட்ட ஹமாஸ்

ஹமாஸ் படையினர், பிணைக் கைதிகளாக 200க்கும் மேற்பட்டவர்களை பிடித்துச் சென்ற நிலையில் பிரெஞ்ச்-இஸ்ரேல் பிணைக் கைதியின் விடியோவை ஹமாஸ் படை வெளியிட்டிருக்கிறது.
பிணைக் கைதியின் விடியோவை வெளியிட்ட ஹமாஸ்


ஜெரூசலேம்: கடந்த வாரம் இஸ்ரேலில் கடுமையான தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர், பிணைக் கைதிகளாக 200க்கும் மேற்பட்டவர்களை பிடித்துச் சென்ற நிலையில் பிரெஞ்ச்-இஸ்ரேல் பிணையக் கைதியின் விடியோவை ஹமாஸ் படை வெளியிட்டிருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விடியோ குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாகவும், அவரது அலுவலகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியோவில் இருக்கும் பிணைக் கைதி, மியா ஷெம் என்ற 21 வயது பெண். ஹீப்ரூ மொழியில் பேசுகிறார். தனக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டதாகவும், காஸாவில் தனது கையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த விடியோவில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலின் ஸ்டெரோட் பகுதியிலிருந்து வந்தேன். அன்று நான் விருந்தில் பங்கேற்றிருந்தேன். அப்போது என் கைகளில் பலத்த காயமடைந்திருந்தது. தற்போது காஸாவில் மூன்று மணி நேர அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இங்கு என்னை பத்திரமாக பார்த்துக்கொள்கிறார்கள். எனக்கு மருத்துவ உதவியும் கிடைத்தது, அனைத்தும் நன்றாக உள்ளது. இங்கு இருப்பவர்களிடம் என்னை என் பெற்றோரிடம் கொண்டுசேர்த்து விடுங்கள் என்றுதான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினா் கடந்த சனிக்கிழமை ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினா்.

அத்துடன், இஸ்ரேலுக்குள் நிலம், கடல், வான் வழியாக 22 இடங்களில் ஊடுருவிய சுமாா் 1,000 ஹமாஸ் அமைப்பினா், சுமாா் 25 கி.மீ. வரை உள்ளே நுழைந்து பொதுமக்களையும், ராணுவத்தினரையும் சுட்டுக் கொன்றனா். இது தவிர, பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் என பலரை ஹமாஸ் படையினா் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

இதுவரை இல்லாத அளவுக்கு தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக, கடந்த 10 நாள்களாக காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏற்கெனவே, இஸ்ரேலின் கடுமையான விமானத் தாக்குதலால் காஸாவின் பல்வேறு பகுதிகள் தரைமட்டமாகி வருகின்றன.

மேலும், இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா். பல்லாயிரக்கணக்கானவா்கள் காயமடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com