
இஸ்ரேல்- ஹமாஸ் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது. காஸாவிற்குள் தரைவழியாக முன்னேற ஆயத்தமாகி வரும் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய இலக்குகளில் ஒருவர், யாஹ்யா சின்வார்.
யார் இவர்?
ஹமாஸின் உச்சகட்ட தலைவர்களில் ஒருவரான யாஹ்யா சின்வார் 22 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் கழித்துள்ளார்.
2017 முதல் ஹமாஸின் தலைமை பொறுப்பில் இருக்கும் சின்வார், கடந்த அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் மீதான தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளது இஸ்ரேல் அரசு.
`பயங்கரவாதத்தின் முகம்’ என இவரை விமர்சிக்கின்றனர். காஸாவின் பின்லேடான யாஹ்யா சின்வாருக்கு 60 அல்லது 61 வயதிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஹமாஸின் முன்னோடி
தெற்கு காஸாவின் முக்கிய நகரமான கான் யூனிஸில் வளர்ந்த சின்வார், ஹமாஸின் படைப்பிரிவுகளில் ஒன்றான அல்-மஜீத் உருவாக்கத்தில் முன்னோடியாக இருந்தார். இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் ஆயுதம் ஏந்திய எழுச்சி உருவான காலத்தில் ஹமாஸ் உருவாக உடன் நின்றவர்.
1988-ல் இரு இஸ்ரேலிய ராணுவத்தினரைக் கொன்றதற்காகக் கைது செய்யப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை இவருக்கு விதிக்கப்பட்டது.
2006-ல் ஹமாஸ் இஸ்ரேல் எல்லையில் அத்துமீறி நுழைந்து இரு ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு ஒருவரைச் சிறைப் பிடித்து சென்றது. 5 ஆண்டுகள் ஹமாஸ் பிடியில் இருந்த அந்த இஸ்ரேலிய வீரரை விடுவிக்க ஹமாஸின் கோரிக்கையான 1027 பாலஸ்தீனர்களின் விடுதலையை 2011-ல் நிறைவேற்றியது இஸ்ரேல். அவர்களில் ஒருவராக யாஹ்யா சின்வார் விடுதலையானார்.
இதையும் படிக்க: பிணைக் கைதியின் விடியோவை வெளியிட்ட ஹமாஸ்
தலைமைப் பொறுப்பு
யாஹ்யா சின்வாரின் பொறுப்பு ஹமாஸின் ஒழுங்கை நிர்வகிப்பது, பாதுகாப்பில் கவனம் செலுத்துவது. 2015-ல் ஹமாஸின் படைவீரர் ஒருவரான மகமூத் இஸ்த்வி, அபகரிப்பு குற்றத்திற்காகவும் ஒழுக்க விதிமீறல் சந்தேகத்திற்காகவும் கொல்லப்பட்டார். அவர் ஓரின ஈர்ப்பாளர் என்பதே அந்த ஒழுக்க விதி மீறல். அபகரிப்பு குற்றம் ஹமாஸின் நோக்கத்திற்கு எதிரானது என சின்வார் கருதினார்.
2015-ல் அமெரிக்காவின் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார், யாஹ்யா சின்வார். அவரை பயங்கரவாதி என அறிவித்தது அமெரிக்கா.
இதையும் படிக்க: காஸாவில் பலியான ஊழியர்களின் எண்ணிக்கை 31 ஆனது: ஐ.நா.
2023 தாக்குதல்
இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் அண்மையில் செய்தியாளர்களிடம் இவரைப் பற்றித் தெரிவித்ததாவது: “யாஹ்யா சின்வார் பயங்கரவாதத்தின் முகம். பின் லேடன் போல இந்தத் தாக்குதலின் மூளையாக இருப்பவர் இவர்தான். (இஸ்ரேலுக்கு) ஒத்துழைக்கிறார்கள் என்பதற்காக பாலஸ்தீனர்களையே கொன்று தனது வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டவர். அப்படித்தான் கான் யூனிஸின் கசாப்பு மனிதராக இவர் ஆனார். நாங்கள் அவரை வீழ்த்துவோம். இது அதிக காலம் எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தரைவழி தாக்குதலுக்கு ஆயத்தமாகி வரும் இஸ்ரேலின் முதன்மையான இலக்குகளில் ஒன்று ஹமாஸின் தலைமையை ஒன்றுமில்லாமல் ஆக்குவது. அந்தப் பட்டியலில் யாஹ்யா சின்வார் முதலிடத்தில் உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இவர் குறித்த விடியோ ஒன்றை இஸ்ரேலிய பாதுகாப்பு அமிச்சகம் தனது அதிகாரபூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இவரைப் பற்றி மேற்குலக ஊடகங்களின், இஸ்ரேலிய பார்வைக்கு மாறான தகவல்களும் கூறப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.