
காஸாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அத்தியாவசிய பொருள்களுடன் காத்திருந்த வாகனங்களின் அணிவகுப்பு, செயற்கைக்கோள் படமாக வெளியிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் இன்று (அக்.21) 15வது நாளாகத் தொடர்கிறது. அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 500க்கும் அதிகமானோர் அன்று உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து காஸா மீது அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளும் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றன. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். காஸாவில் 3,478 பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் காஸாவில் 9700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட மருத்துவ உதவிகளும், உணவு, உடை போன்ற அத்தியாவசிய உதவிகளும் ஆதரவு நாடுகளால் வழங்கப்பட்டது. எனினும் அவை இஸ்ரேல் ராணுவத்தால் காஸா - எகிப்து எல்லையில் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பல்வேறு நாடுகளிலிலிருந்து அனுப்பப்பட்ட 3000 டன்னுக்கும் அதிகமான பொருள்கள் 200க்கும் அதிகமான டிரக்குகளில் அணிவகுத்து நின்றன.
இந்நிலையில், காஸா எல்லையில் அணிவகுத்து நின்ற டிரக்குகளின் செயற்கைக்கோள் புகைப்பம் வெளியாகியுள்ளது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கும்பொருட்டு காஸா- எகிப்து எல்லையான ரஃபா எல்லை இன்று (சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.