70 மணி நேர வேலை: உலக நிறுவனங்களின் தலைவர்கள் சொல்வது என்ன?

அதிக வேலை நேரம் குறித்து உலக நிறுவனங்களின் தலைவர்களின் கருத்துகள் என்னவாக உள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
70 மணி நேர வேலை: உலக நிறுவனங்களின் தலைவர்கள் சொல்வது என்ன?

இந்திய இளைஞர்கள், வாரத்திற்கு 70 மணி நேர வேலை பார்க்க வலியுறுத்திய இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்துகள் இணையத்தில் விவாதப் பொருளாகின.

மேலும், அவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு ஜெர்மன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களின் வேலை நேரத்தை அதிகரித்ததைக் குறிப்பிட்டு பேசினார். உலக நாடுகளோடு இந்தியா போட்டி போட இளைஞர்களிடம் அதிகமாக உழைக்கும் கலாச்சாரம் உருவாக வேண்டும் என அவர் கூறினார்.

இந்தக் கருத்து குறித்து இவருக்கும் முன்பும் பின்பும் உலகளவிலான பெருநிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சொல்லியவற்றை பார்ப்போம்.

ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால், எக்ஸ் தளத்தில், “ மற்ற நாடுகள் பல தலைமுறைகளாக உருவாக்கியதை நாம் ஒரே தலைமுறையில் உருவாக்க வேண்டியுள்ள தருணம் இது” என நாராயணமூர்த்தியின் கருத்தை இணைத்து பதிவிட்டுள்ளார்.

இதே போலான அறிவுறுத்தல் ஒன்றை, இதற்கு முன்பும் 2020-ம் ஆண்டில் நாராயணமூர்த்தி, கொரானாவிற்கு பிறகான காலகட்டத்தில் பொருளாதாரத்தை ஈடுகட்ட இந்தியர்கள் 60 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, 996 என்கிற விதியை உருவாக்கினார். எண் 996 என்பது காலை ஒன்பது மணி முதல் இரவு 9 மணி வரை வாரத்தின் ஆறு நாள்களுக்குமான வேலையைக் குறிக்கும். இது பெரும் சர்ச்சையானது.

உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் பல நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ட்விட்டரை கையகப்படுத்தியபோது அதன் ஊழியரிடம் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்யக் கோரியுள்ளார்.

பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ்பான்டே, லிங்க்ட்இன் தளத்தில் புதிதாக வேலையில் சேர்பவர்கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். “நன்றாக சாப்பிடுங்கள், ஆரோக்கியமாக இருங்கள், 4-5 வருடங்களுக்கு ஒரு நாளுக்கு 18 மணி நேரம் வேலை பாருங்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களை அதிக நேரம் வேலை பார்க்க அறிவுறுத்துகிற தலைமை நிர்வாக அதிகாரிகள், வேலை பார்க்கும் நேரம் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்ள தலைமை நிர்வாக அதிகாரிகள் வார நாள்களில் நாளொன்றுக்கு 9.7 மணி நேரமும் வார இறுதி நாளில் 3.9 மணி நேரமும் வேலை பார்ப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.

இந்திய தலைமை நிர்வாக அதிகாரிகள் 357 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அவர்கள் சராசரியாக வாரமொன்றிற்கு 39 மணி நேரங்கள் பணியாற்றுவதாக ஆய்வுகள் சொல்கின்றன.

தனிப்பட்ட வாழ்வுக்கும் வேலைக்குமான சமநிலை மிகக் குறைவாக இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் அதிக வேலை நேரம் என்பது இந்த சமநிலையை இன்னும் உயர்த்தும் அபாயம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com