புதினை சந்திக்க.. வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரயிலில் செல்வது ஏன்?

கிம் ஜாங்-உன், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை  ரஷியா புறப்பட்ட நிலையில், ரயில் இன்று ரஷியாவை வந்தடைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
புதினை சந்திக்க.. வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் ரயிலில் செல்வது ஏன்?

வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்துப் பேச ரஷியா புறப்பட்ட நிலையில், ரயில் இன்று ரஷியாவை வந்தடையும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கிம் ஜாங்-உன் பயணப்படும் ரயிலில் ரஷியாவுக்கு அளிக்கவிருக்கும் ஆயுதங்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கவச ரயில் ரஷ்யாவை நோக்கி புறப்பட்டிருப்பது, ரஷியா - வடகொரியா இடையே வளர்ந்து வரும் இராணுவ ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே 1,180 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. ஆனால், வடகொரிய அதிபரோ, விமானத்தில் செல்லாமல், ரயிலில் பயணம் செய்கிறார். இது பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

பல வல்லரசு நாடுகளுக்கும் சவால் விடும் வகையில், வடகொரிய அதிபர் கிம் தனது நாட்டு ராணுவ பலத்தை அதிகரித்துக்கொண்டே செல்வதில் தீவிரம் காட்டி வருகிறார். ராணுவ பலத்தை அசுர வேகத்தில் உயர்த்தும் கிம்ஜாங்-உன், ஏன் விமானத்தில் பயணிக்கவில்லை என்ற கேள்விக்கு, அவர்களது பாரம்பரியம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.

வடகொரியாவை உருவாக்கிய கிம் இல் சுங், வழக்கமாக கவச ரயிலில்தான் பயணிப்பாராம். அதே பாரம்பரியத்தை பின்பற்றித்தான் கிம்ஜாங் -உன் ரயிலில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. இது ரயில் என்று சொன்னால் வெறும் சாதாரண ரயில் அல்ல. 20 பெட்டிகளைக் கொண்டிருக்கும், இது குண்டு துளைக்காத கவசப் பெட்டிகளைக் கொண்டது. வெடிகுண்டே வீசினாலும், ராக்கெட் லாஞ்சரைக் கொண்டு தாக்கினாலும் எதுவும் செய்ய முடியாதாம்.

இதில் பாதுகாப்பு ஆயுதங்களும் போதுமான அளவில் இருக்குமாம். ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும் வசதி கூட இருக்கும் இந்த ரயில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாம். இந்த ரயில், வடகொரியாவிலிருந்து, ரஷிய எல்லைக்குள் நுழைந்ததும், அந்த நாட்டின் தண்டவாளத்துக்கு ஏற்ற வகையில் சக்கரங்கள் மாற்றப்பட வேண்டியது வருமாம்.

வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், கிம், பியோங்யாங்கிலிருந்து ரயில் மூலம் புறப்பட்டிருப்பதாகவும், அந்த ரயிலில் மூத்த அதிகாரிகள், ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள், ராணுவ வீரர்கள் இருப்பதாகவும் செவ்வாயன்று இரு தலைவர்களின் சந்திப்பு நிகழும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டிருந்தன.

வடகொரியாவின் வடகிழக்கு எல்லை வாயிலாக ரயிலில் அதிபர் கிம்ஜாங் உன் பயணம் செய்து ரஷியாவுக்கு வரவிருப்பதாகவும், ரயிலில் ரஷியாவுக்கு வழங்க வேண்டிய ஆயுதங்களும் இடம்பெறும் என தென்கொரிய ஊடகம் குறிப்பிட்டிருந்தது. ரஷியாவின் துறைமுக நகரமான விளாடிவோஸ்டோக் பகுதியில் செவ்வாயன்று இந்த சந்திப்பு நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுதப் படையை பலப்படுத்தும் வகையில், வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தகவல் கிடைத்துள்ளதை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.

தற்போது அதனை உண்மையாக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறவுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதற்கான பலனை வடகொரியா சந்திக்கும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுளிவியன் எச்சரித்திருந்தார்.

ரஷியாவிலுள்ள வாக்னர் படைக்கு ஆயுதங்களை வழங்கியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போருக்குப் பிறகு சா்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அதிகரித்து வரும் ராணுவ ரீதியிலான நெருக்கம் சா்வதேச அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.இந்தச் சூழலில், வட கொரியாவுடன் ‘அனைத்து துறைகளிலும்’ ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று அதிபா் புதின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com