அத்துமீறலில் சிக்கும் சிறார்கள்!
அத்துமீறலில் சிக்கும் சிறார்கள்!

போர்த்துகலில் 5,000 சிறார்களிடம் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறல்!

போர்த்துகலில் 5,000 சிறார்கள் பாலியல் ரீதியாக பாதிரியார்களால்  துன்புறுத்தப்பட்டுள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.


லிஸ்பன்: போர்த்துகலில் 1950 ஆம் ஆண்டு முதல் 5,000  சிறார்களிடம் கத்தோலிக்க  மதகுருமார்கள் (பாதிரியார்கள்) பாலியல்  ரீதியாக அத்துமீறியிருப்பதாக தன்னதிகார விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான சிறார்கள் மீது,  பாதிரியார்களின் பாலியல் வன்மங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் எதிரொலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அழுத்தத்தை போப் பிரான்சிஸுக்கு ஏற்படுத்தியது.

தீவிர கத்தோலிக்க வழிபாட்டைக் கொண்ட நாட்டில் நடந்த பாலியல்  அத்துமீறல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட போர்த்துகல் விசாரணை ஆணையம், பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறார்களிடம் கடந்த ஆண்டு விசாரணை  நடத்தி முடித்திருக்கிறது.

இந்த முதற்கட்ட விசாரணையானது, பாதிக்கப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்பதையும் அது கிட்டத்தட்ட 4,815 சிறார்கள் என்ற அளவில் இருக்கும் என்பதையும் அறிய முடிவதாக லிஸ்பனில் மனநல மருத்துவர் பெட்ரோ ஸ்ட்ரெச்ட், செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், 6 நிபுணர்கள் கொண்ட குழு பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் 424 பேரிடம் விசாரணை நடத்தியது. ஆனால், அதில் கிடைத்த தகவல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்பதே. சிலர் அளித்த தகவலில், இந்த பாலியல் துன்புறுத்தலானது பல காலம் நீடித்ததும், சிலருக்கு மிக மோசமான பெருந்துயரங்கள் வரைக் கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலான குற்றச்சாட்டுகளில், குற்றம்சாட்டப்பட்டு விசாரணை தொடங்குவதற்கான கால அவகாசங்கள் முடிந்துவிட்டதாகவும், ஆனால் 25 வழக்குகள் காவல்துறைக்கு மாற்றப்பட்டு பல விசாரணைகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க மிக அரிதான வழக்கு என்னவென்றால், "அலெக்சாண்ட்ரா" என்று பெயரிடப்பட்டிருக்கும் 43 வயது பெண் அளித்த குற்றச்சாட்டு. அவர் தனது அடையாளத்தை மறைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தான் 17 வயதில் கன்னியாஸ்திரி மாணவியாக இருந்து, பாவமன்னிப்புக் கேட்டபோது பாதிரியாரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புறக்கணிப்பும் நோயுறுதலும்


போர்த்துகலில் இதுபற்றி பேசுவதே மிகவும் கடினமானது. இங்கிருக்கும் 80 சதவிகிதம் பேர் கத்தோலிக்கர்கள் என்று கூறும் அலெக்சாண்ட்ரா தற்போது தாயாக உள்ளார். ஐடியில் பயிற்சி பெற்றுவிட்டு, சமையல்கூட உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த ரகசியத்தை நான் பல ஆண்டுகாலமாக மறைத்துவைத்துள்ளேன். ஆனால் தன்னந்தனியாக இதனைக் கையாள்வது மிகவும் சிரமமாக உள்ளது. 'ஏஎஃப்பி' ஊடகத்துக்கு தொலைபேசி வாயிலாக இந்த தகவலை அளித்த அலெக்சாண்ட்ரா, தேவாலய நிர்வாகத்திடம் இது பற்றி தான் முறையிட்டதாகவும் ஆனால் தன் குற்றச்சாட்டுகளை அவர்கள் புறக்கணித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலய பிஷப், தனது குற்றச்சாட்டு குறித்து வாடிகனுக்கு அனுப்பிவைத்துவிட்டதோடு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வாடிகன் சென்ற தனது குற்றச்சாட்டுக்கு இதுவரை எந்த பதிலும் இல்லை என்றும் குறிப்பிடுகிறார். பாதிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, விசாரணை ஆணையம் இருப்பதை அறிந்து, அங்குச் சென்று தனது குற்றச்சாட்டை அளித்து, நேரடியாக உதவி பெற்றதாகவும் கூறுகிறார்.

போர்த்துகலின் மிக உயரிய மதகுருவான லிஸ்பனின் கார்டினல் தலைவர் இம்மானுவல் கிளெமென்டே, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த கால தவறுகளை அடையாளம் காண்டுணர்ந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

பாதிரியார்கள் மன்னிப்புக் கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் அவர்கள் அதை உணர்ந்துதான் சொல்கிறார்களா?  என்று கேட்கும் அலெக்சாண்ட்ரா, பாலியல் குற்றச்சாட்டுகளை தேவாலயங்கள் மறைக்க முயன்றபோது தான் மிகவும் துவண்டுபோனதாகக் குறிப்பிடுகிறார்.

பாலியல் அத்துமீறல்களை நிறுத்த..

போப்பாண்டவர், ஆகஸ்ட் மாதம் லிஸ்பன் வரும் போது, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாக லிஸ்பனின் ஆக்ஸிலியரி பாதிரியார் அமெரிக்கோ ஆகவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் தேவாலயங்களுக்குள் நடந்த ஆயிரக்கணக்கான பாலியல் துன்புறுத்தல்களும் அதனை மூடிமறைத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போப்பாண்டவர், 2019ஆம் ஆண்டு, கத்தோலிக்க தேவாலயங்களுக்குள் நடக்கும் இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களை வேறருக்க உறுதியேற்றார். இந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டிய அழுத்தத்திலும் போப்பாண்டவர் இருக்கிறார். இந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து என பல உலக நாடுகளில் விசாரணைகள் தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போர்த்துகல் மதகுருமார்கள் அனைவரும் வரும் மார்ச் மாதம் ஒன்றுகூடி, இந்த தன்னதிகார விசாரணை ஆணைய அறிக்கையிலிருந்து தகவல்களை திரட்டி, தேவாலயங்களுக்குள் நடக்கும் தவறுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கான வழிமுறைகளை காணுவார்கள் என்று போர்த்துகல் ஆயர் பேரவையின் மூத்த உறுப்பினர் பாதிரியார் இம்மானுவல் பார்போசா கடந்த ஜனவரியில் தெரிவித்திருந்தார்.

கத்தோலிக்க மதகுருமார்களின் பேச்சுக்களை நம்பிக்கை மற்றும் சந்தேகம் என கலவையுடன் எதிர்நோக்கும் அலெக்சாண்ட்ரா, தன்னதிகாரம் கொண்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கையே பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றிலும் பல ஆண்டுகாலமாக எழுப்பப்பட்டிருக்கும் இந்த மௌன சுவர் இடிக்கப்பட வேண்டும் என விரும்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு நல்ல துவக்கம்தான் என்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com