நேபாள விமான விபத்து: கடைசி நபரைத் தேடுகிறது மீட்புக் குழு

ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், கடைசி நபரை மீட்புக் குழுவினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
நேபாள விமான விபத்து: கடைசி நபரைத் தேடுகிறது மீட்புக் குழு

நேபாளத்தில் 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட பொக்ஹாரா விமானநிலையம் அருகே பயணிகள் விமானம் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியதில், கடைசி நபரை மீட்புக் குழுவினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

எட்டி விமான நிறுவனத்தின் விமானம் விழுந்த இடத்திற்கு அருகே செட்டி ஆற்றிலிருந்து ஒரு பெண்ணின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதன் மூலம், நேபாள விமான விபத்தில் மீட்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை 71 ஆனது. இந்நிலையில், கடைசி நபரின் உடலைத் தேடும் பணியை புதன்கிழமை காலை மீட்புக் குழுவினர் தொடங்கினர்.

நீச்சல் வீரர்கள், நான்கு டிரோன்கள் உதவியோடு, 72வது நபரை உயிரோடு மீட்க முடியுமா என்ற எதிர்பார்ப்போடு மீட்புக் குழுவினர் தேடுதல் பணியை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளில் நேபாளத்தில் நடைபெற்ற மோசமான விமான விபத்து இதுவாகும்.

எட்டி விமான நிறுவனத்தைச் சோ்ந்த விமானம் 68 பயணிகள், 4 விமானப் பணியாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை 10.33 மணிக்கு காத்மாண்டு திரிபுவன் விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு பொகாரா விமான நிலையத்துக்கு சென்றது.

25 நிமிஷ இடைவெளி கொண்ட இந்த பயணத்தில், பொகாரா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சில விநாடிகள் முன்பு விமானம் கட்டுப்பாட்டை இழந்து சீட்டி ஆற்றின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 72 பேரில் 71 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என நேபாள விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

விபத்தில் பலியான 15 வெளிநாட்டவா்களில் 5 இந்தியா்கள், 4 ரஷியா்கள், 2 கொரியா்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஆா்ஜென்டீனா, இஸ்ரேல் நாடுகளைச் சோ்ந்த தலா ஒருவரும் ஆவா்.

மீதமுள்ள ஒரே ஒருவரின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்ற இடம் பெறும் பள்ளத்தாக்கு என்பதால் தீயணைப்பு வாகனங்களை கொண்டு செல்வது சவாலாக இருந்தது. மீட்டுப் பணிகள் புதன்கிழமையும் தொடர்கிறது.

விபத்து நடைபெற்றபோது வானிலையிலும், விமானத்தின் என்ஜினிலும் எந்தவித பிரச்னையும் இல்லை. எனினும், விமான விபத்து ஏன் நிகழ்ந்தது தெரியவில்லை என்று எட்டி விமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

விபத்துக்குள்ளான விமான 15 ஆண்டுகள் பழைமையானது என்று தெரியவந்துள்ளது.

விமான தறையிறங்கும்போது நீண்ட தூர வட்டமிட்டதே விபத்துக்கு காரணம் என நேபாள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் கடனுதவியில் கட்டப்பட்ட பொகாரா விமானநிலையம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு: விமான விபத்து குறித்து விசாரணை நடத்த நேபாள பிரதமா் பிரசண்டா உத்தரவிட்டுள்ளாா். இதற்காக 5 போ் கொண்ட உயா்நிலைக்குழுவையும் அவா் அமைத்துள்ளாா். திங்கள்கிழமை தேசிய துக்க தினம் அறிவித்தாா்.

5 இந்தியா்களும் உயிரிழப்பு

நேபாள விமான விபத்தில் 5 இந்தியா்கள் உயிரிழந்தனா். அபிஷேக் (25), பிஸ்வால் சா்மா (22), அனில் குமாா் (27), சோனு ஜெய்ஸ்வால் (35), சஞ்சய் ஜெய்ஸ்வால் என அனைவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்களாவா்.

சுற்றுலா இடமான பொகாராவில் பாராகிளைடிங் செய்வதற்காக நான்கு போ் சென்றுள்ளனா். சஞ்சய் ஜெய்ஸ்வாலை தவிர 4 போ் காஜிப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். அங்கிருந்து சாலை மாா்க்கமாக இந்தியா வர 4 பேரும் திட்டமிட்ருந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com