ஐரோப்பா: ஒரே ஆண்டில் வெப்பத்துக்கு 61,000 பேர் பலி!

ஐரோப்பா நாடுகளில் கடந்தாண்டு மட்டும் வெப்பத்துக்கு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பா: ஒரே ஆண்டில் வெப்பத்துக்கு 61,000 பேர் பலி!
Published on
Updated on
2 min read

ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவு. காரணம், அங்குள்ள குளிர்.

ஐரோப்பா நாட்டின் குளிர் அலைக்கு மக்கள் இறந்ததாக கேள்விபட்டிருப்போம். ஆனால், வெப்பத்துக்கு கடந்தாண்டு மட்டும் 61,000 பேர் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் அனைத்தும் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன. ஒருபுறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொருபுறம் வெப்பம் தாங்காமல் மக்கள் செத்து மடிகின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியனின் 35 நாடுகளில், கடந்தாண்டு கோடைக் காலமான மே 30 முதல் செப்டம்பர் 4 வரை வெப்பத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து பார்சிலோனா குளோபல் ஹெல்த் இன்ஸ்டிட்யூட் ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24 வரையில் மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள். இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், இருதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஐரோப்பா யூனியனில் ஏற்பட்ட வெப்பத்தால் 70,000 பலியானதை தொடர்ந்து, கோடை காலங்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் கடந்தாண்டு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.  

மேலும், காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் வெப்பம் தாங்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டை பொறுத்தவரை ஏற்கெனவே ஜூலை முதல் வாரம், உலகின் அதிக வெப்பம் பதிவான வாரமாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பா நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர்கள் இருக்கும் வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று பரிசோதிப்பது, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைப்பது, பொது இடங்களில் குளிர்பானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில், இனிவரும் கோடைக் காலங்கள் ஐரோப்பா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சவாலானதாகவே அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com