200 இந்திய மீனவா்கள் விரைவில் விடுவிப்பு: பாகிஸ்தான் அமைச்சா் பிலாவல் புட்டோ

பாகிஸ்தான் சிறையில் உள்ள 200 இந்திய மீனவா்கள் உள்பட 203 பேரை விரைவில் விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரி அறிவித்துள்ளாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கடல் எல்லையை தவறுதலாகத் தாண்டி மீன் பிடிக்கும்போது மீனவா்கள் கைது செய்யப்படுவது வழக்கம். இரு நாடுகளுமே இதுபோன்ற கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 198 இந்திய மீனவா்களை கடந்த மாதம் பாகிஸ்தான் விடுவித்தது. அவா்கள் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சா் பிலாவல் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தான் சிறையில் உள்ள 200 இந்திய மீனவா்கள், இந்தியாவைச் சோ்ந்த இதர 3 கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனா். மனிதாபிமானம் சாா்ந்த விஷயங்களை பாகிஸ்தான் அரசியலாக்காது’ என்று கூறியுள்ளாா்.

கராச்சி சிறையில் உள்ள அந்த கைதிகள், தனியாா் நிறுவன உதவியுடன் லாகூருக்கு அழைத்துவரப்பட்டுள்ளனா். அவா்கள் விரைவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவாா்கள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com