
காளி உருவத்தையொட்டிய படத்தை சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்த பகுதியான கிரிமியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு தாக்குதலுக்கு உள்ளானதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்நிலையில் புகைக்கு மேல் ஒரு பெண்ணின் படத்தை சித்தரித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு ட்வீட் செய்திருந்தது. அந்த பெண்ணின் உருவம் காளி உருவத்தை ஒத்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய படத்தை நீக்கியதுடன், காளி தேவி உருவத்தையொட்டி சித்தரித்ததற்காக உக்ரைன் வருத்தம் தெரிவிக்கிறது என்றும் இந்தியாவின் கலாசாரத்தை உக்ரைன் மக்கள் எப்போதும் மதிக்கிறார்கள், இந்தியாவின் ஆதரவைப் பாராட்டுகிறார்கள் என்றும் உக்ரைன் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் எமின் ட்சாபரோவா கூறியுள்ளார். இந்தியாவுடனான பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதில் உக்ரைன் உறுதியாக இருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...