
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு முழுவதும் 9 வெவ்வேறு மாகாணங்களில் குறைந்தது 347 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக அந்த நாட்டின் தனியார் செய்தி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை, குடும்ப பிரச்னை, வேலையின்மை மற்றும் சுதந்திரமின்மை போன்றன இதுபோன்ற தற்கொலை முயற்சிக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக அளவில் இதுபோன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஐபிஎல்: முதல் வீரராக 7 ஆயிரம் ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை!
இது தொடர்பாக அந்த தனியார் செய்தி நிறுவனம் தரப்பில் கூறியதாவது: இதுபோன்று தற்கொலை முயற்சி செய்தவர்களில் குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர். 9 வெவ்வேறு மாகாணங்களில் தற்கொலை முயற்சிகளுக்கு அதிகமாக முயன்றுள்ளனர். அவற்றுள் முதல் இடத்தில் பதாக்ஷான் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் 251 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 20 வயது நிரம்பிய பெண் ஒருவர் அமிலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். வறுமையின் காரணத்தினால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
ஒரு தனியார் மருத்துவமனையின் தலைவர் கூறுகையில், 250 பேர் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அவர்களில் 188 பேர் பெண்கள் மற்றும் 62 பேர் ஆண்கள். ஆப்கானிஸ்தானில் நிலவும் பொருளாதார பிரச்னைகள் மற்றும் குடும்ப பிரச்னை பெருமளவில் ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குடும்ப பிரச்னை, ஏழ்மை, கல்வியறிவின்மை, விழிப்புணர்வு இல்லாமை, வேலையின்மை, தங்குவதற்கு இடவசதியின்மை மற்றும் உறுதியற்ற எதிர்காலம் போன்ற பல காரணிகள் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மணிப்பூரை குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும்: சசி தரூர்
உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 8 லட்சம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...