

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராணுவம் குறித்து அவதூறாக பேசியது, ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் இம்ரான் கான் மீது பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வழக்கின் விசாரணை ஒன்றுக்கு ஆஜராக வந்த இம்ரான் கானை நீதிமன்றத்தின் ஜன்னல்களை உடைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தனர்.
இந்த கைதை தடுக்க முயன்ற இம்ரான் கானின் வழக்கறிஞரை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் தாக்கியதில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர்களும் காணொலி மூலம் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அனைத்து மாகாணங்களிலும் இம்ரானின் கட்சித் தொண்டர்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுவதால், கலவரம் நிகழாமல் இருக்க ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.