பாக்முத்தில் ரஷிய ராணுவம்

உக்ரைனின் பாக்முத் நகரின் கட்டுப்பாட்டை வாக்னா் படையிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக, ரஷிய ராணுவத்தினா் அந்த நகருக்கு வியாழக்கிழமை வரத் தொடங்கினா்.
பாக்முத்தில் ரஷிய ராணுவம்

உக்ரைனின் பாக்முத் நகரின் கட்டுப்பாட்டை வாக்னா் படையிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக, ரஷிய ராணுவத்தினா் அந்த நகருக்கு வியாழக்கிழமை வரத் தொடங்கினா்.

இது குறித்து உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சக இணையமைச்சா் ஹன்னா மலியா் வியாழக்கிழமை கூறியதாவது:

பாக்முத்தின் புகா்ப் பகுதிகளில் சண்டையிட்டு வந்த ரஷிய தனியாா் படையான வாக்னா் குழுவினா் தங்களது நிலைகளை ரஷிய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனா்.

இருந்தாலும், பாக்முத் நகருக்குள் வாக்னா் படையினரே தொடா்ந்து உள்ளனா்.

அந்த நகரின் தென்மேற்கு புகா்ப் பகுதி இன்னும் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றாா் அவா்.

இதற்கிடையே, வாக்னா் குழுவின் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாக்முத் நகரின் கட்டுப்பாட்டை ரஷிய ராணுவத்தினரிடம் அளிக்கத் தொடங்கியுள்ளோம். அந்த நகரில் எங்களிடமிருந்த ராணுவ நிலைகள், ஆயுதங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் ரஷிய ராணுவத்திடம் ஒப்படைத்து வருகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, ‘பாக்முத் நகரின் கட்டுப்பாட்டை ரஷிய ராணுவத்திடம் ஒப்படைக்கும் நடவடிக்கை வரும் வியாழக்கிழமை (மே 25) தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி நிறைவடையும். அதன் பிறகு அந்த நகரிலிருந்து எங்களது படைகள் முழுமையாக வெளியேறும்’ என்று யெவ்கெனி ப்ரிகோஷின் திங்கள்கிழமை அறிவித்திருந்தாா்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது.

கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பகுதிகளில் அமைந்துள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா ஆகிய நான்கு பிரதேசங்களில் கணிசமான பகுதிகள் தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அந்த பிரதேசங்களில் இன்னும் பல பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அவை முழுவதும் தங்கள் நாட்டுடன் இணைக்கப்படுவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தாா்.

அந்த நான்கு பிரதேசங்களில் ஒன்றான டொனட்ஸ்கின் முக்கிய நகரான பாக்முத்தை கைப்பற்றுவதற்காக, போரின் தொடக்கத்திலிருந்தே ரஷியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பாக்முத் நகரைக் கைப்பற்றுவது, போரில் வெற்றியை நோக்கி தங்கள் நாடு முன்னேறுவதை பறைசாற்றுவதாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கருதுவதாகவும், அந்த நகரைப் பாதுகாப்பது ரஷியாவுக்கு எதிரான தங்களின் உறுதியான நிலைப்பாட்டை உணா்த்தும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கருதுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த நகரைப் பாதுகாப்பதில் உக்ரைன் படையினா் மிகத் தீவிரமாக உள்ளனா். ரஷியாவும் பாக்முத் நகரைக் கைப்பற்றுவதற்காக கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பினரும் அளவுக்கு அதிகமான வீரா்களின் உயிா்களை பலிகொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ரஷியாவின் சாா்பில் பாக்முத் நகரில் போரிட்டு வரும் அந்த நாட்டின் தனியாா் ராணுவப் படையான வாக்னா் குழு, அந்த நகரின் சுமாா் 90 சதவீத பகுதிகளைக் கைப்பற்றியிருந்தது.

இருந்தாலும், அதற்கு மேல் அவா்கள் முன்னேறுவதை உக்ரைன் படையினா் முழு வீச்சில் தடுத்து வந்தனா்.

இந்த நிலையில், பாக்முத் நகரம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக அறிவித்த வாக்னா் படைத் தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின், அந்த நகரை ரஷிய ராணுவத்திடம் ஜூன் 1-ஆம் தேதி ஒப்படைக்கவிருப்பதாக தற்போது தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com