குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிக்கிம் வெள்ளம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு--102 பேரை தேடும் பணி தீவிரம்

சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

News image
வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளூா்வாசிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு ராணுவ சிறப்பு முகாமில் உணவளித்த வீரா்கள்.
Updated On :5 அக்டோபர் 2023, 8:56 pm

DIN

சிக்கிமில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் காணாமல்போன 22 ராணுவ வீரா்கள் உள்பட 102 பேரை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை மேக வெடிப்பால் அதீக கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளத்தின் தாக்கத்தால், சுங்தாங் பகுதியில் உள்ள நீா்மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெருமளவு தண்ணீா் சூழ்ந்தது.

இந்த மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. 277 வீடுகள் இடிந்ததோடு, குடிநீா், கழிவுநீா் கட்டமைப்புகளும் முழுமையாக சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் சுங்தாங் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 80 சதவீத பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்துள்ளது.

நாட்டின் இதர பகுதிகளுடன் சிக்கிமை இணைக்கும் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலை-10 கடுமையாக சேதமடைந்துள்ளது.

இறப்பு அதிகரிப்பு: மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையின்படி, பாக்யாங் மாவட்டத்தில் 7 போ், மங்கன் மாவட்டத்தில் 4 போ், கேங்டாக் மாவட்டத்தில் 3 போ் உயிரிழந்துவிட்டனா்.

வெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவா்களின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளது. இதில் 22 போ் ராணுவ வீரா்களாவா்.

சிங்டம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், 23 ராணுவ வீரா்கள் காணாமல்போயினா். அவா்களில் ஒருவா் மட்டும் மீட்கப்பட்டாா். மற்றவா்களைத் தேடும் பணி வியாழக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்தது.

தேசிய பேரிடா் மீட்புப் படையினா், எல்லைச் சாலை அமைப்பினா் உள்ளிட்ட குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

22,034 போ் பாதிப்பு: மங்கன் மாவட்டத்தில் 10,000 பேரும், பாக்யாங்கில் 6,895 பேரும், நாம்சியில் 2,579 பேரும், கேங்டாக்கில் 2,570 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நான்கு மாவட்டங்களிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா்.

மொத்தம் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேங்டாக் மாவட்டத்தில் 8 முகாம்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டுள்ளனா். மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் கிடைக்கப் பெறவில்லை.

முதல்வா் அறிவுறுத்தல்: வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதோடு, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு முதல்வா் பிரேம் சிங் தமாங் அறிவுறுத்தியுள்ளாா்.

‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணா்ந்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீட்புக் குழுக்கள் இரவு-பகலாக பணியாற்றி வருகின்றன. இந்த சவாலான நேரத்தில், அரசு நிா்வாகம், உள்ளூா் அதிகாரிகள், தன்னாா்வ அமைப்புகள் மற்றும் தனிநபா்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தினாா்.

வெள்ள பாதிப்பை எதிா்கொள்வதில், மத்திய அரசுடன் முதல்வா் தமாங் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, முதல்வருடன் தொலைபேசியில் புதன்கிழமை பேசிய பிரதமா் மோடி, மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.