
இஸ்ரேலிய இராணுவம் நாடெங்கிலும் இருந்து 3,60,000 இராணுவ வீரர்களை காஸா பகுதி நோக்கி குவித்துள்ள நிலையில் தேவையேற்பட்டால் தரை வழியாகவும் முன்னேறித் தாக்கும் ஏற்பாட்டைச் செய்து வருகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் போர் மேலாண்மை அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவருக்கும் இந்தச் சபையில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலிய அரசுக்கு அந்நாட்டு மக்களின் அதீத நெருக்கடி உள்ளது. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய மக்களின் வெறுப்புக்கு, அரசு வினையாற்றுவதாகக் கருதப்படுகிறது.
கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் குழுவினர், கண்ணில் தென்பட்ட இஸ்ரேலியர்கள் பலரைத் தாக்கினர்.
இதையும் படிக்க: இஸ்ரேலில் அவசரநிலை! இருளில் மூழ்கியது காஸா!!
இளம்வயது பெண்ணையும் ஆணையும் கட்டி வைத்து அவர்கள் தலையில் சுட்டது, உயிரோடு மக்களை எரித்தது, பெண்களைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது , வீரர்களின் தலையைத் துண்டித்தது எனப் பல அக்கிரமங்களில் ஹமாஸ் குழுவினர் ஈடுபட்டதாக பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டுகிறார்.
இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கவும் ஹமாஸ் குழுவை முற்றிலும் அழித்தொழிக்கவும் சபதம் ஏற்றுள்ளது, இஸ்ரேலிய அரசு. ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் இறக்க வேண்டியவர் என்று மக்கள் முன் தொலைகாட்சியில் பேசும்போது தெரிவித்துள்ளார், நெதன்யாகு.
இஸ்ரேலியர்கள் 150 பேர் ஹமாஸின் பிடியில் பணயக்கைதிகளாக உள்ளனர். மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இதையும் படிக்க: காஸா: ஐ.நா.வின் 11 ஊழியர்கள், 30 மாணவர்கள் பலி
போர் தொடங்கி 5-வது நாளான நேற்று (புதன்கிழமை) இரவு, காஸா முழுமையாக இருளுக்குள் மூழ்கியது.
மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போதிய அறுவை சிகிச்சை கருவிகள், மருந்துகள் பற்றாக்குறையால் சிகிச்சை அளிப்பது கடினமாகி வருவதாக எல்லைகளற்ற மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கட்டிட இடிபாடுகளிடையே சிக்கிய உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. எந்தவித அறிவிப்புமின்றி வான்வழியாக இஸ்ரேலிய விமானங்கள் தாக்குவதாகக் காஸா பகுதியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஒரே நாளில் அகதிகள் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்து 3,39,000 பேர் ஐ.நா. பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.