அமெரிக்காவில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு அங்கீகார கால அவகாசம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையான கிரீன் கார்டு பெற பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர்.
இதில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு முன்னதாக, வேலைவாய்ப்பு அங்கீகாரம் வழங்கப்படும். அதிகபட்ச காலமான இரண்டு ஆண்டுகளுக்கு இதற்கு விண்ணப்பிக்கலாம். இரண்டு ஆண்டு காலம் முடிந்தபின்னர் மீண்டும் நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், இந்த வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கான(Employment Authorization Documents) செல்லுபடி காலத்தை தற்போது 5 ஆண்டுகளாக உயர்த்தி அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) அறிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 27 முதல் வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தும். இதனால் 2 ஆண்டுகளில் இதனை நீட்டிக்க வேண்டிய தேவையிருக்காது.
கிரீன் கார்டு விண்ணப்பங்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் இருக்கும் சூழலில், விண்ணப்பதாரர்களுக்கு இந்த கால நீட்டிப்பு பெரிதும் உதவும். இது அவர்களுக்கு அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் கிரீன் கார்டு விண்ணப்பங்களில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யவும் முடியும்.
மேலும் எதிர்காலத்தில் கிரீன் கார்டு விண்ணப்பிக்கத் தகுதியாகும் ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் ஹெச்-1பி, ஹெச்-1சி, ஹெச்-2ஏ, ஹெச் -2பி, ஹெச்-3 விசா வைத்திருப்பவர்களின் கணவன்/மனைவிகளுக்கும் விருப்ப நடைமுறை பயிற்சி (OPT) திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச மாணவர்களுக்கும் இந்த நீட்டிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் வீணாகும் 83 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள்