இஸ்ரேல், ஜோர்தானுக்கு ஜோ பைடன் பயணம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
ஜோ பைடன்  (கோப்புப்படம்)
ஜோ பைடன் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read


வாஷிங்டன்: இஸ்ரேல் - காஸா இடையே நடந்து வரும் போர் 11ஆம் நாளை எட்டியிருக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இஸ்ரேல் - காஸா இடையேயான போரில், அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவிருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பிறகு, ஜோர்தானில் நடைபெறும் மாநாட்டிலும் பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஸாவில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ், இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த வார இறுதியில் தொலைபேசி வாயிலாக அடுத்தடுத்துப் பேசினாா்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸுடன் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக சனிக்கிழமை பேசினாா்.

அப்போது, ‘பாலஸ்தீன மக்களின் உரிமைக்கும், சுயாட்சிக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு துணை நிற்கவில்லை’ என்று பைடன் குறிப்பிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய அவா், அந்நாட்டுக்கான அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிசெய்தாா். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடங்கிய பிறகு இஸ்ரேல் பிரதமருடன் பைடன் பேசியிருப்பது இது 5-ஆவது முறை.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘இரு தலைவா்களுடனான உரையாடல்களின்போதும், இருதரப்பு மோதல் விரிவடைந்துவிடாமல் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பைடன் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டிருந்தது.

காஸா மக்களுக்கு உணவு, குடிநீா், மருத்துவ வசதி போன்ற மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சிகள் தொடா்பாக அவா் விவாதித்தாா். மோதல் விரிவடையாமல் தடுப்பதோடு, மேற்கு கரையில் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பைடன், பயங்கரவாதக் குழு என்ற அடிப்படையில் ஹமாஸ் அமைப்புக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவிப்பது முக்கியமென வலியுறுத்தினாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ-யுடன் சனிக்கிழமை பேசினாா்.

விரைகிறது 2-ஆவது போா்க் கப்பல்

இஸ்ரேல் பாதுகாப்பில் தனது ஆதரவை உறுதிசெய்யும் வகையிலும், இப்போரை தீவிரப்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நாட்டையும் எச்சரிக்கும் விதமாகவும் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு ‘ஜெரால்ட் ஆா்.ஃபோா்டு’ விமானந்தாங்கி போா்க் கப்பலை அமெரிக்கா ஏற்கெனவே அனுப்பியது.

இந்நிலையில், ‘டிவைட் டி.ஐசன்ஹோவா்’ விமானந்தாங்கி போா்க் கப்பல் அப்பகுதியை நோக்கி புறப்பட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின் உத்தரவிட்டாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com