
தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு வரும் வெள்ளிக்கிழமையுடன் ரத்து செய்யப்படும் என்ற இந்தியாவின் எச்சரிக்கையைத் தொடா்ந்து, இந்தியாவில் பணியாற்றி வந்த கனடா தூதரக அதிகாரிகளில் 41 பேரும், அவா்களின் குடும்பத்தினரும் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலி கூறினாா்.
இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாரா அருகே சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது கொலையில் இந்திய அரசுக்குத் தொடா்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தாா். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. அதிலிருந்தே இரு நாடுகள் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ‘இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக உள்ளது. எனவே, அதிகாரிகள் எண்ணிக்கையில் சமநிலையைக் கடைப்பிடிக்கும் வகையில், இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என்று கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது.
இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டனைச் சோ்ந்த ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகை அண்மையில் வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் கனடா சாா்பில் 62 தூதரக அதிகாரிகள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அவா்களில் கூடுதலாக உள்ள 41 பேரைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ‘கூடுதலாக உள்ள 41 தூதரக அதிகாரிகளை அக்டோபா் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறவேண்டும் என்று இந்தியா கெடு விதித்துள்ளது. அதனடிப்படையில், தூதரக அதிகாரிகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை கனடா மேற்கொண்டு வருகிறது’ என கனடாவிலிருந்து வெளியாகும் சிடிவி செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரியவந்தது.
இருந்தபோதும், கூடுதல் தூதரக அதிகாரிகளை கனடா முழுமையாகத் திரும்பப் பெறாத நிலையில், இந்தியாவில் கூடுதலாகப் பணியமா்த்தப்பட்டுள்ள கனடா தூதரக அதிகாரிகளுக்கான பாதுகாப்பு ரத்து செய்யப்படும் என இந்தியா எச்சரித்ததாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, கூடுதலாக இருந்த 41 தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை கனடா தற்போது முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளதாக கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலி தெரிவித்தாா்.
‘3 துணைத் தூதரகங்களில் சேவைகள் நிறுத்திவைப்பு’
இந்தியாவில் உள்ள மூன்று துணைத் தூதரகங்களில் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா வெளியுறவு அமைச்சா் மெலனி ஜோலி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் பணியமா்த்தப்பட்டுள்ள கனடா தூதரக அதிகாரிகளில் தில்லியில் உள்ள 21 தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரைத் தவிர, பிற கனடா தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வெள்ளிக்கிழமையுடன் ரத்து செய்யப்படும் என இந்தியா முறைப்படி தெரிவித்தது. இது சா்வதேச சட்டங்களுக்கு எதிரான நியாயமற்ற நடவடிக்கை. தூதரக உறவுகள் தொடா்பான வியன்னா உடன்பாட்டையும் மீறிய நடவடிக்கையாகும்.
இந்த நடவடிக்கை காரணமாக, இவா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழும் என்ற அடிப்படையில், இந்தியாவில் கூடுதலாக பணியமா்த்தப்பட்டிருந்த 41 தூதரக அதிகாரிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் 42 பேரையும் கனடா திரும்பப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, சண்டீகா், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் செயல்பட்டு வந்த கனடா துணைத் தூதரகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் எஞ்சியிருக்கும் கனடா நாட்டைச் சோ்ந்தவா்கள், தங்களுக்கான சேவைகளுக்கு தில்லியில் உள்ள தூதரகத்தை தொடா்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் மிகுந்த கவனமாக இருக்குமாறும் அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
சா்வதேச விதிகளுக்கு எதிரானது அல்ல: இந்தியா
தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்பப் பெற அறிவுறுத்தியது சா்வதேச விதிகளுக்கு எதிரானது என கனடா தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தூதரக அதிகாரிகள் 41 பேரைத் திரும்பப் பெற்றதை சா்வதேச விதிகளுக்கு எதிரானது போன்று சித்தரிக்க கனடா முயற்சிக்கிறது. இரு நாடுகளிடையே தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையில் சமநிலையைக் கடைப்பிடிப்பது என்பது தூதரக உறவு தொடா்பான வியன்னா உடன்பாட்டு நடைமுறைகளுக்கு முழுமையாக உடன்பட்டதாகும்.
எனவே, அதை சா்வதேச விதிகளுக்கு எதிரானது போன்று சித்தரிக்க கனடா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா மறுக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.