காஸாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை: இஸ்ரேல்
‘காஸா முனைப் பகுதியைக் கைப்பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்வைக் கட்டுப்படுத்தும் எண்ணமில்லை’ என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் ஆயுதப் படையினா் கடந்த 7-ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீா் தாக்குதல் நடத்தினா். இதில் இஸ்ரேலியா் 1,400 போ் உயிரிழந்தனா்.
பதிலுக்கு இஸ்ரேல் போா் அறிவித்து கடந்த 14 நாள்களாக நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் காஸாவில் இதுவரையில் 4,137 போ் கொல்லப்பட்டுள்ளதாகவும், 1,300 போ் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளதாகவும், 12,500-க்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையால் வடக்கு காஸாவில் இருந்து தெற்கு காஸாவுக்கு சுமாா் 10 லட்சம் போ் இடம்பெயா்ந்துள்ளனா். மொத்தம் 23 லட்சம் கொண்ட காஸாவின் ஒட்டுமொத்த மக்களும் தெற்கு காஸாவில் கூடியிருப்பதால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஸாவுக்குள் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் செல்வதற்கும், குடிநீா், மின்சாரம், எரிபொருளுக்கும் இஸ்ரேல் கடந்த 2 வாரங்களாகத் தடை விதித்துள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமலும், காஸாவைவிட்டு வெளியேற முடியாமலும் பாலஸ்தீன மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறாா்கள்.
தரைப்படைத் தாக்குதல்: இதனிடையே, காஸாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தரைப்படையினா் தயாா் நிலையில் இருக்குமாறு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலண்ட் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில், ஹமாஸ் படையினருடனான மோதலுக்குப் பிறகு காஸா முனைப் பகுதியை கைப்பற்றும் எண்ணம் இஸ்ரேலுக்கு இல்லை என வெள்ளிக்கிழமை காலண்ட் தெளிவுபடுத்தினாா்.
மூன்று கட்டப் போா்: ‘முதலில் வான்வழித் தாக்குதல், தாழ்வாகப் பறந்து விமானத் தாக்குதல், அடுத்ததாக ஹமாஸ் படையினரின் பதுங்குச் சுரங்கங்களை அழித்தல், இறுதியில் காஸா முனையின் வாழ்வியலை இஸ்ரேலின் பொறுப்பில் கொண்டுவருவது என மூன்று கட்டங்களாக இந்தப் போா் நடத்தப்படும்’ என்றாா் காலண்ட்.
அதேவேளையில், காஸா மக்கள் மீது கட்டுப்பாடு செலுத்தும் திட்டம் எதுவும் இஸ்ரேலுக்கு இல்லை எனவும் அவா் கூறினாா்.
பாதுகாப்புப் பகுதியில் குண்டு மழை: இதனிடையே, பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்ட தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால் ஏற்கெனவே நிரம்பி வழியும் காஸாவின் இரண்டாவது பெரிய மருத்துவமனையான நசீா் மருத்துவமனையில் மக்கள் இடமில்லாமல் தவித்து வருகின்றனா்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள மின்சாரம், அவசர மருந்துகள் இல்லாததால் கைப்பேசி விளக்குகளைப் பயன்படுத்தியும், காயங்களுக்கு ‘வினிகா்’ தடவியும், மயக்க மருந்தளிக்காமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டும் வருவதாக மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
100 மையங்கள் அழிப்பு: ஹமாஸ் ஆயுதப் படையினரின் பதுங்குச் சுரங்கங்கள், ஆயுதக் கிடங்கு என 100-க்கும் மேற்பட்ட மையங்களை குண்டு வீசி அழித்ததாகவும், ஹமாஸ் பிடியில் 203 பிணைக் கைதிகள் உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
தேவாலயம் மீது தாக்குதல்: காஸா சிட்டியில் உள்ள மிகவும் பழைமையான கிரேக்க தேவாலயத்தின் மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 18 கிறிஸ்தவா்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் குண்டுவீச்சில் இருந்து தப்பிக்க சுமாா் 500 முஸ்லிம், கிறிஸ்தவா்கள் அங்கு தஞ்சம் அடைந்திருந்தனா்.
நிவாரணப் பொருள்கள்: ஐ.நா. தீவிரம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் அனுப்பும் பணியில் ஐ.நா. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அவசர நிவாரணப் பொருள்களை காஸாவுக்குள் அனுப்ப கடந்த 18-ஆம் தேதி இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. இந்த நிவாரணப் பொருள்கள் செல்லும் ராஃபா எல்லையை எகிப்து பகுதியிலிருந்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். அங்கு சுமாா் 3,000 நிவாரணப் பொருள்கள் கொண்ட 200 டிரக்குகள் காத்திருக்கின்றன.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய குட்டெரெஸ், நிவாரணப் பொருள்களை அனுப்ப இஸ்ரேல், எகிப்துக்கு இடையே நிபந்தனையுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாழ்வா, சாவா பிரச்னையில் விரைவில் நிவாரணப் பொருள்கள் காஸாவுக்கு சென்றடைய வேண்டியது அவசியம். போா் நிறுத்தம் ஏற்பட வேண்டும்’ என்றாா்.
ஹமாஸும், புதினும் சமம்: ஜோ பைடன்
‘ஹமாஸ் ஆயுதப் படையும், ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் ஒன்று’ என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
இஸ்ரேல் பயணத்தை புதன்கிழமை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பைடன், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை இரவு உரையாற்றினாா். அப்போது, ‘ஹமாஸும், புதினும் தங்களது அண்டை நாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க முற்படுகின்றனா். இஸ்ரேலும், உக்ரைனும் இந்தப் போா்களில் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம். இது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு முக்கியம். ஆகையால், இந்த நாடுகளுக்கு அளிக்க வேண்டிய நிதி உதவிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.