
இஸ்ரேல் - காஸா போர்
காஸா பகுதி முழுவதையும் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசி தீவிரமாகத் தாக்கி வருவதால், கட்டடங்கள் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து அதில் இருக்கும் குடும்பங்களை சின்னாபின்னமாக்கி வருகிறது.
இஸ்ரேல் படையினர் கொத்துகொத்தாக வீசும் குண்டுகளால், பல வீடுகள் தரைமட்டமாகி, அதற்குள் இருந்த பலர் உயிரோடு புதைந்ததாக நேரில் பார்த்த சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க.. அதிகரிக்கும் மோசடி: ஆதார் பயோ-மெட்ரிக்கை லாக் செய்துவிட்டீர்களா?
ஏற்கனவே, வான்வழித் தாக்குதலால், காஸாவில் ஏராளமான இன்னுயிர்கள் இல்லாமல் போயிருக்கும் நிலையில், விரைவில் தரைவழித்தாக்குதலை படுதீவிரமாக்க இஸ்ரேல் படை தயாராகி வருகிறது. ஏற்கனவே, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் தாக்குதல்களால், காஸா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் பல செயலிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் படையின் கண்மூடித்தனமான தாக்குதலின்போது, பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்கா உள்ளிட்ட இதர நாடுகள், இஸ்ரேல் - காஸா போரில் பிற நாடுகளும் இணைந்துகொண்டுவிடுமோ என்ற கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புதன்கிழமையன்று, இஸ்ரேல் - காஸா போர் 19வது நாளை எட்டியிருக்கிறது. இவ்விரு நாடுகளுமே எதிர்கொண்ட மிக மோசமான 5 போர்களில் இது ரத்தக்களறியான போராகப் பார்க்கப்படுகிறது. ஹமாஸ் படை அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இஸ்ரேல் தாக்குதலில், இதுவரை 5,791 பாலஸ்தீனர்கள் பலியாகியிருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 704 பேர் பலியானதாகவும், 16,297 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் பகுதிகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை அசோசியேட் பிரஸ் தன்னிச்சையாக கணக்கிட முடியாமல், மருத்துவமனைகளில் இருந்து வரும் எண்ணிக்கையை மட்டுமே கணக்கிட்டு வருகிறது.
அக்டோபர் 7அம் தேதி ஹமாஸ் படை நடத்திய தாக்குதலில், இஸ்ரேலில் 1,400 பேர் பலியானதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களே. வெளிநாட்டவர் உள்பட 222 பேரை ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாக காஸாவுக்குள் பிடித்துச் சென்றனர். இதுவரை இவர்களில் 4 பெண்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலவரம்..
ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட போர் நிறுத்தத்தை மறுத்துவிட்டது.
இஸ்ரேல் காஸா பகுதிகள் மீது தரைவழியாகப் படையெடுக்கத் தயாராகும் போது ஈராக் மற்றும் சிரியாவில் எல்லைப் பகுதிகளில் நடந்த போரில் இருந்து பெற்ற கடினமான பாடங்களை அமெரிக்கா பகிர்ந்து கொண்டு வருகிறது.
போர் தீவிரமடைந்தால், அமெரிக்கர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான தற்செயல் திட்டங்களையும் அமெரிக்கா உருவாக்கி வைத்துள்ளது.
தெற்கு சிரியா மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் பலியானதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் பலி எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருப்பதோடு, குழந்தைகளின் பலி எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்திருப்பதாக அஞ்சப்படுகிறது.
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மிகச் சிறிய உடல்களை மீட்புப் படையினர் கைப்பற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உயிரற்ற குழந்தைகளின் உடல்களை துணிகளால் சுற்றி, பெரியவர்களின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாலையோரம் மீட்புப் படையினர் வைத்துச் செல்வதை அங்கிருப்போர் கலங்கிய நெஞ்சத்தோடு பார்த்துத் துடிக்கிறார்கள்.
காஸாவிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...