
இஸ்ரேல் படைகள் காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களால், காஸா முழுவதும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் படைகள் வெள்ளிக்கிழமை இரவு காஸா மீது வான் மற்றும் தரைவழியில் நடத்திய கடும் தாக்குதலில், அப்பகுதி முழுவதும் சின்னாபின்னமாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய வான் மற்றும் தரைப்படைகள் காஸா பகுதியில் தங்கள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாக இஸ்ரேலின் தலைமை இராணுவ செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
மிகக் கடுமையான குண்டுவெடிப்பு காரணமாக தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, காஸாவில் என்ன நடக்கிறது என்பதே உலகத்துக்குத் தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
இரவில் தொடர்ந்து நடக்கும் வெடிகுண்டு மழைக்கு இடையே, தரையிலும் கட்டடங்களிலும் விழுந்து வெடிக்கும் குண்டுகள் வானை நோக்கி ஒளிப்பிழம்பை ஏற்படுத்துவதுமாக காஸா நகரம் முழுக்க காட்சியளிக்கிறது. தொடர் தாக்குதலுக்கு இடையே தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதால், ரெட் கிரெசன்ட், உலக சுகாதார அமைப்பு, மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரன்டியர்ஸ், யூனிசெஃப் உள்ளிட்ட இதர உதவிக் குழுக்கள் பலவும், காஸாவில் பணியாற்றிக் கொண்டிருந்த தங்களது ஊழியர்களுடனான தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டதாகக் கவலை தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் தகவல் தொடர்பு வழங்கும் பால்டெல் நிறுவனம், தங்களது தொலைபேசி தொடர்பு மற்றும் இணைய சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது.
இதையும் படிக்க..பயங்கரவாதம் வீரியம்கொண்டது; அதற்கு எல்லைகள் தெரியாது: ஐநாவில் இந்தியா
நள்ளிரவு நேரத்தில், காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியிருந்தாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் ஆர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார். மேலும், வான் வழித் தாக்குதல்கள் அனைத்தும், ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் உள்ளிட்ட சில இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாள்களாக, வான் வழித் தாக்குதலுடன், ராணுவப் படையும் இணைந்து மாலை நேரத்தில் காஸா பகுதிகளை சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்துகின்றன என்றார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படையானது, மிகுந்த தீரத்துடன் செயல்படுவதாகவும, இலக்கைக் குறிவைத்து இந்தப் போரை தொடர்வாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காஸா எல்லைக்கு வடக்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்ரேலிய கடலோர நகரமான அஷ்கெலோனில், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் கடற்பரப்பில் அங்கும் இங்கும் பறந்து செல்லும் சப்தமும், வெடிகுண்டுகள் தொடர்ந்து விழுந்து வெடிக்கும் சப்தமும் கேட்டுள்ளது. போர் தீவிரமடைவதற்கு, கடைசி நிமிடம் வரை இருப்பிடத்திலிருந்து புறப்படுவதைத் தள்ளிப்போட்ட மக்கள், திடீரென அங்கிருந்து ஒரே நேரத்தில் கிளம்பியதால், வடக்குப் பாதை முழுவதும் பரபரப்பாக இருந்துள்ளது.
இஸ்ரேல் அதிகாரிகள் இது குறித்து பேசுகையில், ஹமாஸ் அதன் தவறுகளுக்கான விலையை கொடுக்கத்தான் வேண்டும், இன்று இரவு தக்க பதிலடியைக் கொடுக்கிறோம். இது முடிந்ததும், காஸா முழுக்க முற்றிலும் வேறுபட்டு காணப்படும் என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையில், காஸா மீது உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில், அதற்கு முன்னதாக, காஸாவை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டும் என்பதற்காகவே, இஸ்ரேல் இந்த திடீர் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் 120 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் ஐ.நா. கூறுகையில், காஸாவில் அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டு, மக்களுக்கு அடிப்படைத்தேவைகள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர்கள் ஓடிக்கொண்டிருக்க, உணவு மற்றும் குடிநீர், மருந்து இல்லாமல் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, பாலஸ்தீனிய அமைப்புகள், காஸாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட் வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும், அதில் ஒரு ராக்கெட் டெல் அவிவ் நகரில் இருந்த குடியிருப்புக்குள் விழுந்து 2 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...