ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தைவானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 25 ஆண்டுகள் காணாத சக்திவாய்ந்த அதிர்வு

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 9:49 pm

DIN

தைவானில் 7.4 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது. அந்தத் தீவு கடந்த 25 ஆண்டுகளில் சந்தித்திராத மிக சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தைவானின் தெற்குக் கடலோர நகரான ஹுவாலியனுக்கு சுமார் 18 கி.மீ. தெற்கு-தென்மேற்கே, 34.8 கி.மீ. ஆழத்தில் புதன்கிழமை காலை 7.58 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5.28 மணி) நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.4 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், 7.2 அலகுகளாகப் பதிவானதாக தைவானின் மத்திய காலநிலை ஆய்வு நிறுவனமும் தெரிவித்தன.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 44 பின்னதிர்வுகள் ஏற்பட்டன. அவை ரிக்டர் அளவுகோலில் அதிகபட்சமாக 6.4 அலகுகள் வரை பதிவாகின.

தலைநகர் தைபேக்கு வெறும் 150 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சாய்ந்தன. பல வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் அங்கிருந்து பீதியுடன் அவசரமாக வெளியேறினர்.

தைபே நகரில் பழைய கட்டடங்களில் ஒட்டப்பட்டிருந்த ஓடுகள் உடைந்து விழுந்தன. பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்புகளால் இதுவரை 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 963 பேர் காயமடைந்ததாகவும், சுமார் 152 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

தைவானில் 25 ஆண்டுகளுகக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிந்தைய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். அந்தத் தீவின் ஜிச்சி பகுதியில் 1999 செப்டம்பரில் 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 2,415 பேர் உயிரிழந்தனர்.

பிலிப்பின்ஸ் கடல் புவித் தகடும், யூரோசிய புவித் தகடும் ஒன்றுடன் ஒன்று உராயும் பகுதியில் அமைந்துள்ளதால் தைவானில் அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. தற்போது நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியில் இந்த இரு புவித் தகடுகளும் ஆண்டுக்கு 75 மில்லி மீட்டர் எதிரெதிராக நகர்கின்றன.

சுனாமி எச்சரிக்கை: இந்த நிலநடுக்கத்தைச் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், அந்த எச்சரிக்கை பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிரதமர் மோடி இரங்கல்

தைவானில் புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "தைவானில் நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.