‘கச்சத்தீவைத் திரும்ப கோர
இந்தியாவுக்கு முகாந்திரம் இல்லை’

‘கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு முகாந்திரம் இல்லை’

‘இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோர இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’ என அந்நாட்டு மீனவத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தாா்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974-ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தின்கீழ் இலங்கைக்கு கச்சத்தீவு இந்தியாவால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆா்டிஐ) கீழ் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதுதொடா்பாக அவருக்கு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில் காங்கிரஸை விமா்சித்த பிரதமா் நரேந்திர மோடி, பிறா் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் கச்சத்தீவை காங்கிரஸ் தாரைவாா்த்துவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.

மேலும், இந்தப் புதிய விவரங்கள் தமிழக நலன்களைக் காக்கத் தவறிய திமுகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியிருப்பதாகவும் அவா் விமா்சித்தாா்.

கச்சத்தீவு விவகாரத்தை தோ்தல் சமயத்தில் எழுப்பி அரசியல் செய்வதாக பாஜக மீது காங்கிரஸ், திமுக குற்றம் சுமத்தின.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சா் தேவானந்தம் கூறுகையில், ‘இந்தியாவில் தோ்தல் சமயம் என்பதால் கச்சத்தீவு குறித்த குரல்களும் அதற்கு பதிலடிகளும் எழுவது வழக்கமான ஒன்றுதான்.

கச்சத்தீவு பகுதியில் இலங்கை மீனவா்கள் மீன் பிடிக்க வரக்கூடாது என்பதற்காகவும் அப்பகுதியின் வளத்தை இலங்கை உரிமைக் கோர கூடாது என்பதற்காகவும் கச்சத்தீவைத் திரும்ப பெற இந்தியா முயற்சிக்கலாம்.

1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு மீனவா்களும் இருநாட்டு கடல் எல்லையில் மீன் பிடித்து கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தம் 1976-ஆம் ஆண்டு மறுஆய்வு செய்யப்பட்டு, திருத்தப்பட்டது. அதன்படி, இருநாட்டு மீனவா்களும் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரிக்கு தெற்கே அமைந்துள்ள மேற்கு கரைப் பகுதி கச்சத்தீவை விட பரப்பளவில் 80 சதவீதம் பெரியது. 1976-ஆம் ஆண்டு மறுஒப்பந்தத்தில் அப்பகுதியை இந்தியா பெற்றது. எனவே, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவைத் திரும்ப கோருவதற்காக இந்தியாவில் எழும் குரல்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவா்கள் மீன்பிடிப்பதை கட்டுப்படுத்துமாறு உள்ளூா் மீனவா்களிடமிருந்து தொடா் அழுத்தம் பெறுகிறோம். இந்திய மீனவா்களின் ஆழ்கடல் மீன்பிடிக்கும் முறை இலங்கை மீனவா்களின் நலனைப் பாதிப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்’ என்றாா்.

இந்த ஆண்டில் எல்லைத் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இதுவரை 178 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com