
வங்கதேச பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா நேற்று(ஆக. 5) ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து அந்நாட்டில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைய ஏதுவாக நாடாளுமன்றத்தை விரைவில் கலைக்கப் போவதாக அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் திங்கள்கிழமை நள்ளிரவில் தெரிவித்துள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கலீதா ஸியாவை வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், வங்கதேசத்தில் அமைய உள்ள இடைக்கால அரசுக்கு, நோபல் பரிசு வென்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையேற்க வேண்டுமென்ற கோரிக்கையை வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் அமைப்புகள் இன்று(ஆக. 6) வலியுறுத்தியுள்ளன. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முனைவர் முகமது யூனுஸ் செயல்படுவதை தாங்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
84 வயதான முகமது யூனுஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக போராட்டக்குழுவின் தலைவர்களில் ஒருவரான நஹித் இஸ்லாம் தெரிவித்துள்ளார். தங்கள் பரிசீலனையை ஏற்காமல் வேறொருவர் தலைமையில் புதிய அரசு அமைந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளார்.
இதனிடையே, தற்போது வெளிநாட்டிலுள்ள முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜிநாமா செய்திருப்பதை வரவேற்றுள்ளார். இந்த நடவடிக்கை வங்கதேசத்திற்கான இரண்டாவது விடுதலையாகக் கருதப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.
வங்கதேச பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை விடுத்து வீடுகளுக்கு திரும்புமாறு முகமது யூனுஸ் கேட்டுக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தை விடுத்து அமைதியைக் கடைபிடிக்குமாறு போராட்டக்காரர்களை வங்கதேச ராணுவ தலைமைத் தளபதி வாக்கர்-உஸ்-ஸமானும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வங்கதேசத்தில் வெவ்வேறு பகுதிகளில் கடந்த இரு நாள்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களில் 119 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிராமிய வங்கிகள் மூலம் வறுமை ஒழிப்புப் பிரசாரத்தை முன்னெடுத்ததற்காக முனைவர் முகமது யூனுஸுக்கு 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 2007-இல் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர், அதன்பின் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு ஆட்சியமைத்ததும் தன் முடிவை கைவிட்டார்.
வங்கதேசத்தில் நடந்தவை...
வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இடஒதுக்கீட்டை எதிா்த்து அண்மையில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் 200-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். அதன்பின் இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பின் வன்முறை படிப்படியாக குறைந்தது.
இந்நிலையில், இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டத்தில் பலா் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் கைதானவா்களை விடுவிக்கக்கோரியும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த சனிக்கிழமை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனா். அப்போது போராட்டக்காரா்களுக்கும், வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சியின் மாணவா் அணியான சத்ரா லீக் மற்றும் காவல் துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினா் உள்பட 94 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா். இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை நேற்று(ஆக. 5) ராஜிநாமா செய்துவிட்டு இந்தியா வந்தடைந்தார். அவர் அடுத்தக்கட்டமாக லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வங்கதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது....
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.