
வங்கதேசம் முழுவதும் மாணவர் அமைப்பின் போராட்டம் வன்முறையாக வெடித்து பலர் கொல்லப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், பதவியிலிருந்து விலக அவர் ஒருபோதும் விரும்பவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மாறாக நாடு முழுவதும் நடைபெறும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பை தீவிரப்படுத்துவது குறித்து மட்டுமே அவர் ஆலோசித்திருக்கிறார். ஆனால், பாதுகாப்புப் படையினர், அவரது கூற்றுக்கு ஒப்புக்கொள்ளவில்லை, மாறாக, மக்கள் போராட்டத்தின் தீவிரத்தை, வெறும் ராணுவத்தைக்கொண்டு அடக்க முடியாது என்று கைவிரித்ததாக அந்நாட்டு நாளிதழ் தெரிவிக்கிறது.
பிரதமர் வீட்டு வளாகத்துக்கு வரும் வாயில்களை போராட்டக்காரர்கள் அடைந்துவிட்டனர் என்ற செய்தி கிடைத்த பிறகே, அவர் பிரதமர் இல்லத்தை விட்டு வெளியேறுவது குறித்தே திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
திங்கள்கிழமை காலை நடந்த கூட்டத்தில், அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பு படையின் தலைவர்களை அழைத்து, பிரதமர் இல்லத்துக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கூறினார். ஆனால், அவரது அரசியல் ஆலோசகர்களோ, வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்து பலி எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், உடனடியாக ஆட்சி அதிகாரத்தை ராணுவத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தினர். ஆனால், 76 வயதாகும் ஐந்து முறை பிரதமராக இருந்தவர் ஏனோ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே, ஊரடங்கு அமலில் இருக்கும் இடங்களில் படைப்பலத்தை அதிகரிக்கவே அவர் விரும்பியிருக்கிறார். கடைசி வரை நாட்டில் அமைதியை நிலைநாட்டிவிட முடியும் என்றே நம்பியும் இருக்கிறார். ஆனால் அப்படி நடக்கவில்லை, டாக்காவின் பல இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். அவர்களின் இலக்காக இருந்தது பிரதமர் இல்லம்.
பாதுகாப்புப் படை அதிகாரிகளிடம் அவர் கேட்டது ஒன்றுதான், ஏன் உங்களால் போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால், உண்மையில் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்தது. அதிகப் படைகள் மட்டுமே தீர்வல்ல என்பதே பாதுகாப்புப் படையின் பதிலாக இருந்தது. ஷேக் ஹசீனா ஒப்புக்கொள்ளவில்லை. தங்கையிடம் பேசினார்கள் அதிகாரிகள். ஆனால் அதுவும் பயன் அளிக்கவில்லை. இப்போதுதான், ஷேக் ஹசீனாவின் மகன் ஷஜீப் வாஜேத், தனது தாயிடம் பேசுகிறார். பாதுகாப்பு கருதி பதவி விலக ஒப்புக்கொள்ள வைக்கிறார்.
இது குறித்து ஷஜீப் வாஜேத் விளக்கம் கொடுத்திருக்கிறார், தனது தாய்க்கு வங்கதேசத்தை விட்டு வெளியேற விருப்பமில்லை என்றாலும், அவரது பாதுகாப்புக் கருதியே வெளியேறுகிறார். அவர் இனி அரசியலுக்குத் திரும்பமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஷேக் ஹசீனா தனது உடைமைகளை எடுத்து வைத்துக்கொள்ள 45 நிமிடங்களே கிடைத்தன. ராணுவ ஹெலிகாப்டர் தயாரானது, போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்துக்குள் நுழைவதற்கும், அந்த இல்லத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேறுவதற்குமுள்ள இடைவெளியில் வங்கதேச அரசியலே முற்றிலும் மாறியது.
பிற்பகல் 2.30 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் ஏறுகிறார் ஷேக் ஹசீனா. இதன் மூலம், அவர் தொடர்ந்து 15 ஆண்டுகள் வங்கதேச பிரதமராக இருந்து வந்த சாதனை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அவர் வங்கதேச ராணுவ ஹெலிகாப்டர் மூலம், இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கினார். அந்த ஹெலிகாப்டர் இன்று இந்தியாவிலிருந்து புறப்பட்டு வங்கதேசம் சென்றது. ஹசீனா இல்லாமல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.