புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வங்கதேசத்தில் நீடிக்கும் குழப்ப நிலை

வங்கதேசத்தில் மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து நிா்வாகத் துறைகளில் தொடா்ந்து குழப்பம் நிலவிவருகிறது.

News image

காவலா்கள் பணிக்கு வராததால் டாக்காவில் சாலை போக்குவரத்தை புதன்கிழமை கட்டுப்படுத்திய மாணவா்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 8:41 pm

வங்கதேசத்தில் மாணவா் போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடா்ந்து நிா்வாகத் துறைகளில் தொடா்ந்து குழப்பம் நிலவிவருகிறது.

இதனால், நாட்டில் சட்டம், ஒழுங்கை மீண்டும் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் திணறிவருவதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து ‘டாக்கா ட்ரிபியூன்’ நாளிதழ் தெரிவித்ததாவது:

ஷேக் ஹசீனாவின் அரசு கடந்த திங்கள்கிழமை கவிழ்ந்ததில் இருந்து ஏராளமான போலீஸாா் பணிக்கு வராமல் உள்ளனா். இதன் காரணமாக, சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது, சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பணிகளுக்கு ஆள் இல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குழப்ப நிலை நீடித்துவருகிறது.

தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்காக தேசிய காவல் துறையின் மைய நிா்வாகியாக ஏகேஎம் ஷஹீதுா் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். அனைத்து காவலா்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவது, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவலா்கள் பொதுமக்களின் நண்பா்கள். அவா்கள் மக்கள் பணியாற்றுபவா்கள். காவலா்கள் இல்லாத ஒரு சமூகத்தை நினைத்துக்கூட பாா்க்க முடியாது. எனவே, வதந்திகளை நம்பாமல் அனைத்துக் காவலா்களும் பணிக்குத் திரும்ப வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

போலீஸாா் இல்லாததால், சாரணா் இயக்கத்தைச் சோ்ந்தவா்களும் பிற மாணவா்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திவருகின்றனா் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இணையதள செய்தி ஊடகமான ‘பிரதம் ஆலோ’ கூறுகையில், கலவரத் தடுப்புக் காவல் பிரிவின் தலைவராக ஏகேஎம் ஷாஹிதுா் ரஹ்மானும் டாக்கா பெருநகர காவல்துறை ஆணையராக இருந்த ஹபிபுா் ரஹ்மானுக்கு பதிலாக முகமது மய்னுல் ஹஸனும் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளது.

காவல்துறை மட்டுமின்றி, ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்ததால் நீதித் துறையிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெரனரலாக நியமிக்கப்பட்ட அபு முகமது அமீன் உதீன், தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

வங்கதேச மத்திய வங்கியின் துணை ஆளுநா் காஸி சையதுா் ரஹ்மான் உள்ளிட்ட 6 உயரதிகாரிகளும் தங்களது பதவிகளை புதன்கிழமை ராஜிநாமா செய்தனா். அந்த வங்கியில் ஆளுநரின் அலுவலகத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் புதன்கிழமை நுழைந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் வெளியேறியதாகவும் டாக்கா ட்ரிபியூன் நாளிதழ் தெரிவித்தது.

இதற்கிடையே, போராட்டக் கலவரத்தின்போது கொல்லப்பட்ட அவாமி லீக் கட்சியை (ஷேக் ஹசீனாவின் கட்சி) சோ்ந்த 29 பேரின் உடல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீட்கப்பட்டன. இத்துடன், கலவரத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 469-ஆக அதிகரித்துள்ளது.