
பிரிட்டனில் நிகழும் தொடர் வன்முறையால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பிரிட்டனில் கடந்த வாரம், நடன வகுப்பில் இருந்த மூன்று குழந்தைகள், கத்தியால் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைதியின்மை வெடித்தது.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக இஸ்லாமியர்களுக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த நிலையில், பிரிட்டனில் வசிக்கும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
பிரிட்டனுக்கான இந்திய தூதரகம் தெரிவிப்பதாவது, “பிரிட்டனில் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளதை இந்தியர்கள் அறிந்திருக்கக் கூடும். பிரிட்டனின் வன்முறை நிலவரத்தை இந்தியத் தூதரகம் மிகவும் கவனமாகக் கண்காணித்து வருகிறது.
இந்தியாவில் இருந்து பிரிட்டன் வருபவர்கள், இங்குள்ள சூழ்நிலையை அறிந்து கவனமுடன் இருக்க வேண்டும். கலவரம் குறித்த உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கலவரம் நடக்கும் பகுதிகளுக்கோ அல்லது வன்முறை நிகழும் பகுதிகளுக்கோ செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், அவசரத் தேவைகளுக்கு, இந்தியத் தூதரகத்தை தொடர்புகொள்ள விரும்புவோர் +44(0)2078369147 என்ற எண்ணையோ அல்லது inf.london@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்” எனக் கூறியுள்ளது.
வடமேற்கு இங்கிலாந்தில் ஜூலை 30, செவ்வாய்க்கிழமையில் சௌத்போர்ட் பகுதியில், ஒரு நடனப் பள்ளியில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தை இஸ்லாமியர் ஒருவர்தான் செய்தார் என்ற வதந்தி பரவியது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பல மசூதிகள் சூறையாடப்பட்டன. ஆனால், விசாரணை மேற்கொண்டதில், சிறுமிகளைக் கொலை செய்தவர் முஸ்லீம் அல்ல; வேல்ஸில் பிறந்த 17 வயது ஆக்ஸல் ருடகுபனா என்பவர்தான் என்று கண்டறியப்பட்டது.
இருப்பினும், வன்முறையில் ஈடுபட்டோர் மசூதிகளைத் தாக்கிக் கொண்டுதான் இருந்தார்கள். இதனையடுத்து, முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களுக்கு இங்கிலாந்து அரசு கூடுதல் பாதுகாப்பை வழங்கியது.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, ``மிக மோசமான சீர்குலைவில் ஈடுபட்டதற்காக, அவர்கள் நிச்சயமாக வருந்துவார்கள்’’ என்று கூறிய பிரதமர் ஸ்டார்மர் கலவரக்காரர்களை எச்சரித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.