
சால்ட் லேக் சிட்டி: தோழியின் தாயை, கழுத்தை அறுத்துக் கொலை செய்த நபருக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.
கடந்த 1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளவுடியா பென் என்பவரைக் கொலை செய்த குற்றத்தில் அமெரிக்காவின் உடா பகுதியைச் சேர்ந்த டாபெரோன் தாவே ஹனி (48), குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
இன்று அதிகாலை 12.25 மணிக்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விஷ ஊசி செலுத்தி 17 நிமிடங்களில் மரணமடைந்ததாகவும் அவரது கால்கள் டேப் மூலம் கட்டப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு விஷ ஊசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அவர் சில முறை சுற்றிலும் பார்த்ததாகவும், பிறகு மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் விஷ ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
இறப்பதற்கு முன்பு, அவர் கடைசியாகக் கூறியது, ஒருவரை இழந்தவர்களுக்கு இந்த மரணத்தின் மூலம் ஆறுதல் கிடைக்கும் என்றால் அதைச் செய்யுங்கள் என்றுதான் கூறி வருகிறேன், அவர்கள் சொல்லிவிட்டால், உங்களால் மாற்ற முடியாது, ஆனால், அவர்கள் சொல்வதைக் கேட்காதீர்கள், இங்கே இருக்கும் சகோதரர், சகோதரிகளே மாற்றத்தை நோக்கி செல்லுங்கள், அனைவரையும் நேசிக்கிறேன், உங்களை கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
ஹனி, 22 வயது இருக்கும்போது, போதையில், தனது காதலியின் தாயான பென்னின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவரது கழுத்தை பல முறை அறுத்து, உடல் முழுக்க வெட்டிக் கொலை செய்துள்ளார்.
அப்போது, ஹனியின் 2 வயது மகள் உள்பட பென்னின் பேரன்கள் அந்த வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி, ஹனி இந்த கொலையில் ஈடுபட்டபோது, அங்கிருந்த குழந்தைகளில் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், இதன் காரணமாக, மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மரணத்துக்கு முன்...
ஹனி, இறப்பதற்கு முன்பு, சீஸ்பர்கர், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், மில்க் ஷேக் ஆகியவை சாப்பிட்டிருக்கிறார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்தினம் மாலை, ஹனி தனது குடும்பத்தினருடன் சிறை வளாகத்தில் நேரத்தை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிரான அமைப்பினர், சிறை வளாகத்தில் அனைத்து உயிர்களும் விலைமதிப்பில்லாதவை என்ற கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ச்சியாக, ஹனியின் மரண தண்டனையை ரத்து செய்ய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஜூன் மாதம் கையெழுத்தானது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கொடிய விஷ மருந்துக்கு ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், ஜூன் மாதம் ஹனியின் மரணதண்டனை உத்தரவு கையெழுத்தான நிலையில், ஜூலையில், அரசு அதன் செயல்படுத்தும் நெறிமுறையை சற்று மாற்றியது. அதில், அதிக அளவு பென்டோபார்பிட்டலை பயன்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த மருந்தானது, செல்லப்பிராணிகளை கருணைக்கொலை செய்ய பயன்படுத்தப்படும். இது நரம்பு மண்டலத்தை அடக்கும் என்று கூறப்படுகிறது.
தான் போதையில் இல்லாமல் இருந்திருந்தால் இந்தக் கொலையை செய்திருக்க மாட்டேன் என்றும், தனது மகளை வளர்க்க தனக்கு உதவுமாறும் ஹனி வைத்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
ஆனால், பலியானவரின் குடும்பத்தினர் யாரும், கருணைக்கு ஹனி தகுதியானவர் இல்லை என்று மறுத்துவிட்டனர். மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஒரு கண்ணுக்கு மற்றொரு கண்தான் தீர்வு என்றும் கூறியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.