
வங்கதேசத்துக்கு இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 14 ஆண்டுகளுக்கு முன் வெளியான அமெரிக்க கார்டூன் தொடர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மிக பிரபலமான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடர் நிஜ வாழ்க்கையில் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணிப்பதில் புகழ்பெற்றது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை இந்தக் கார்டூன் தொடர் சரியாக கணித்திருக்கிறது.
இதற்கு முன்னதாக எபோலா வைரஸ் தொற்று, டொனால்ட் டிரம்ப் கைது, கமலா ஹாரிஸ் அமெரிக்க வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இருவரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுவது, ஃபிபா விளையாட்டு ஊழல், விர்ச்சுவல் ரியாலிட்டி கண்டுபிடிப்பு உள்ளிட்டவைகளையும் முன்பே கணித்துள்ளது.
இதேபோல, கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி வெளியான ‘தி சிம்ப்ஸன்ஸ்’ கார்டூன் தொடரின் 22-வது சீசனின் 2-வது எபிசோடான ‘லோன் எ லிசா’-வில் லிசா சிம்ப்ஸன்ஸ் எனும் கதாபாத்திரம் நன்கொடை அளிப்பதற்காக ஒரு தொழிலதிபரை தேர்வு செய்ய, அந்த தொழிலதிபரின் மூக்கில் கிளிக் செய்ய வேண்டும். அதற்காக முகமது யூனுஸை தேர்வு செய்யும் லிசா, யூனுஸின் கேலிச் சித்திர உருவம் நகரும் போது அவரது மூக்கில் அம்புக்குறியை(cursor) வைக்க முயற்சி செய்வது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன.
தற்போது இந்த விடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
‘ஏழைகளுக்கான வங்கியாளா்’ என்று அழைக்கப்படும் முகமது கான் யூனுஸ், வங்கதேசத்தில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் ‘குறுங்கடன்’ (மைக்ரோ-ஃபைனான்ஸ்) முறைக்கு முன்னோடியாக இருந்த ‘கிராமீன் வங்கி’யை நிறுவியதற்காக அவருக்கு கடந்த 2006-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
1984-ஆம் ஆண்டு அவா் தொடங்கிய அந்த வங்கி, சாதாரணமாக மற்ற வங்கிகளிடமிருந்து கடன் பெறத் தகுதியில்லாதவா்களுக்கு கடனுதவி அளித்துவந்தது. இதனால் ஏராளமானவா்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.
அவர் 1976 ஆம் ஆண்டில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு குழுவிற்கு 27 டாலர் (17 யூரோ) கடன் கொடுத்து தொடங்கினார். கிராமீன் வங்கி வங்கதேசத்தில் மட்டும் 80 லட்சத்துக்கும் அதிகமான கடன் பெறுபவர்களைக் கொண்ட 100 கோடி டாலர் சிறுகடன் நிறுவனமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.