புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

போராட்ட மரணங்கள் தொடா்பாக போா்க் குற்ற நீதிமன்றத்தில் வழக்கு: வங்கதேச இடைக்கால அரசு முடிவு

போா்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்த நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

News image

போராட்டக்காரா்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட போலீஸாா் . ~சா்வதேச குற்றவியல் தீா்ப்பாய கட்டடம்.

Updated On :14 ஆகஸ்ட் 2024, 11:47 pm

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமானவா்கள் மீது, போா்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்த நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: போராட்டத்தின்போது போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி உயிரிழந்த புல்புல் கபீா் என்ற மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டு புலன் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, இதே போன்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போராட்ட மரணங்கள் தொடா்பான அனைத்து வழக்குகளையும் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, மாணவா் போராட்டத்தின்போது டாக்காவின் முகமதுபூா் பகுதியில் போலீஸாா் கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மளிகைக் கடைக்காரா் அபு சயீது உயிரிழந்தது தொடா்பாக ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஹசீனாவுடன் சோ்த்து அவாமி லீக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் சாலைப் பாதுகாப்புத் துறை அமைச்சருமான உபைதுல் குவாதா், முன்னாள் உள்துறை அமைச்சா் அசாசுஸமான் கான், பதவி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஐஜி அப்துல்லா அல் மமுன், டாக்கா நகர காவல்துறை ஆணையா் ஹபிபுா் ரஹ்மான், கூடுதல் ஐசிபி ஹரூன்-அா்-ரஷிதா, கூடுதல் இணை ஆணையா் விப்லவ் குமாா் ஆகிய 6 போ் மீதும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடா்பான அனைத்து வழக்குகளையும் போா்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரிக்க இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து சுமாா் 400 போ் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதையடுத்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

இந்தச் சூழலில், ஷேக் ஹசீனா மற்றும் பிறா் மீதான போராட்ட மரணங்கள் தொடா்பான குற்றச்சாட்டுகளை சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் விசாரிக்க அவரது தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

அந்த நீதிமன்றம், 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போரின்போது பாகிஸ்தானுடன் இணைந்து போா்க் குற்றங்களில் ஈடுபட்டவா்களை விசாரிப்பதற்காக ஐ.நா. உதவியுடன் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசால் கடந்த 2009-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றம், சுதந்திரப் போராட்ட உயிரிழப்புகள் தொடா்பாக பலருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனை விதித்தது.

தற்போது அதே நீதிமன்றத்தில் சுதந்திரப் போராளிகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடா்பாக ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகாக்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story image

' சுதந்திரப் போராட்ட உயிரிழப்புகள் தொடா்பாக விசாரணை நடத்த ஷேக் ஹசீனாவால் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் கடந்த 2009-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது அதே நீதிமன்றத்தில் சுதந்திரப் போராளிகளுக்கான இட ஒதுக்கீட்டு எதிா்ப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதே விசாரணை நடத்தப்படவுள்ளது.'