வானிலை நிகழ்வுகள்கூட சிறுமிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன: பாகிஸ்தானில் குழந்தை திருமணங்களுக்கு யுனிசெஃப் எச்சரிக்கை!

பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலையால் குழந்தை திருமணங்கள் அதிகரிப்பு
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது வெவ்வேறு நாடுகளில், 16 முதல் 18 வயது வரை வேறுபடுகிறது. ஆனால், பாகிஸ்தானின் மோசமான பொருளாதார நிலைமையால், குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

பாகிஸ்தானில் 2022 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றத்தால் பெய்த பருவமழையின் விளைவாக, வெள்ளம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் சிந்து பகுதியில் இருந்த பல கிராமங்கள் பாதிக்கப்பட்டதுடன், விவசாயப் பகுதியில் அறுவடைப் பயிர்களும் அழிக்கப்பட்டன.

இந்த வெள்ளத்தால், நாட்டின் மூன்றில் ஒரு பகுதி, நீரில் மூழ்கியது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான மக்களும் இடம்பெயர்ந்தனர்.

ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையிலான கோடை பருவமழை, மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் இன்றியமையாதது. ஆனால், காலநிலை மாற்றத்தால் பருவமழை மோசமானதாக மாறுகிறது; இதனால் நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் நீண்ட கால பயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள், தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக வேறு வழியின்றி, பெறும் பணத்திற்கு ஈடாக, தங்கள் மகள்களைத் திருமணம் செய்து வைக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையினால், 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளே, அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது.

720 டாலருக்கு விற்கப்பட்டேன்

வெள்ளத்தின் அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்காக, ஷமிலா என்ற 14 வயது சிறுமியை, பெற்ற பணத்திற்கு ஈடாக, அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஷமிலாவின் மாமியார், ஷமிலாவுக்கு ஈடாக 720 அமெரிக்க டாலரை, ஷமிலாவின் பெற்றோருக்கு கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள், ஒரு நாளைக்கு ஒரு டாலரில் மட்டுமே குடும்ப வாழ்க்கையை ஓட்டுவதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை, பெரியதாகவே தோன்றியது.

"நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். இனியாவது, என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்" என்று கூறிய ஷமிலா, தனது இரு மடங்கு வயதுடைய ஒருவருடனான திருமணத்தைப் பற்றி தெரிவித்தார்.

14 வயதுக்கு சிறுமிக்கு 6 மாதக் குழந்தை

அதேபோல், நஜ்மா அலி என்ற 14 வயதுடைய சிறுமியும், 2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டு, மனைவியாகப் போகிறோம் என்ற உற்சாகத்தில் மூழ்கினார்.

"என் திருமணத்திற்காக, என் பெற்றோருக்கு 900 அமெரிக்க டாலரை, என் கணவர் கொடுத்தார். ஆனால், என் கணவர் கடன் வாங்கித் தான், என் பெற்றோருக்குக் கொடுத்துள்ளார்; அதனைத் திருப்பிச் செலுத்த, இப்போது வழி இல்லை.

உதட்டுச்சாயம், ஒப்பனைப் பொருள்கள், உடைகள், மரச்சாமான்களைப் பெறுவேன் என்று நினைத்தேன். இந்த நிலையில், எங்களிடம் சாப்பிடக்கூட எதுவும் இல்லாததால், என் கணவர் மற்றும் 6 மாதக் குழந்தையுடன் என் பெற்றோரிடமே திரும்பி வந்துவிட்டேன்’’ என்று கூறுகிறார்.

தன்னார்வத் தொண்டால் காப்பாற்றப்பட்டேன்

இந்த நிலையில், சும்பல் அலி ஷேக் என்பவர், தன் மகளுக்கு குறைந்தபட்சம் சாப்பிடவும், அடிப்படை வசதிகளைப் பெறவும், தங்களின் 10 வயது மகளான மெஹ்தாபுவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர்.

ஆனால், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலையீட்டால், மெஹ்தாபுவின் திருமணம் நிறுத்தப்பட்டது.

மெஹ்தாபு, தற்போது தையல் தொழில் கற்று வருகிறார் என்று கூறப்படுகிறது. இதனால், அவர் ஒரு சிறிய வருமானத்தை சம்பாதிக்க முடிந்தது.

"நான் படிக்க விரும்புகிறேன் என்று என் தந்தையிடம் கூறியுள்ளேன். என்னைச் சுற்றியுள்ள திருமணமான பெண்கள், மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்வதை நான் காண்கிறேன்; அதனை ஏற்க நான் விரும்பவில்லை" என்று மெஹ்தாபு கூறினார்.

இருப்பினும், பருவமழை பெய்யும்போது, தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட திருமணமும் நடக்கும் என்ற அச்சத்துடனேயே, அவர் வாழ்கிறார்.

குழந்தைத் திருமணத்தில் எங்களுக்கும் விருப்பமில்லை

பாகிஸ்தானில் பெருகிவரும் குழந்தைத் திருமணங்கள் குறித்து, பாகிஸ்தானியர் தெரிவிப்பதாவது, 2022 மழைக்கு முன்பெல்லாம், சிறுமிகளுக்கு இவ்வளவு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டிய அவசியம், எங்களுக்கு இருந்ததில்லை.

எங்கள் பெண்கள், நிலத்தில் வேலை செய்வார்கள், மரக் கட்டில்களுக்கு கயிறு திரிப்பார்கள்; எங்களிடம் பசுமையான வயல்கள் இருந்தன, அங்குதான் பெண்கள் வேலை செய்வார்கள். ஆண்கள் மீன்பிடித்தலிலும், விவசாயத்திலிலும் இருப்பார்கள்; அவர்கள் பல காய்கறிகளை வளர்ப்பார்கள்.

எங்களுக்கான, செய்ய வேண்டிய வேலைகள் எப்போதும் இருந்தன. ஆனால், அவை அனைத்தும் இப்போது இறந்துவிட்டன,

ஏனெனில், 2022-ல் ஏற்பட்ட வெள்ளத்தால், நீரில் நச்சுத்தன்மை கலந்து விட்டது. மாசுபட்ட நீரில் மீன்கள் எதுவும் இல்லை, அதன் துர்நாற்றம், அப்பகுதி முழுவதையும் மூழ்கடிக்கிறது.

இதனால்தான், வறுமையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தங்கள் மகள்களை சிறுவயதிலேயே திருமணத்தை செய்து கொடுக்கும் நிலைக்கு, இப்போது தள்ளப்பட்டிருக்கிறோம்.

2022-க்கு முன்பாக, பெண்கள் எங்களுக்கு சுமையாக இருக்கவில்லை. ஆனால், இப்போது திருமணம் செய்து கொள்ளும் வயதுடைய பெண்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

அதுமட்டுமின்றி, தங்கள் கணவர்கள் வேலையில்லாமல் இருப்பதால், அவர்கள் தங்கள் பெற்றோருடனேயே வாழ, திரும்பி வருகிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

5 ஆண்டுகால முன்னேற்றத்தை அழிக்கும்: யுனிசெஃப்

தீவிர வானிலை நிகழ்வுகள்கூட சிறுமிகளை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. குழந்தைத் திருமணத்தின் பாதிப்பு 18 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது; இது ஐந்து ஆண்டுகால முன்னேற்றத்தை அழிப்பதற்கு சமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com