
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தின் தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுநிலை மருத்துவம் படித்து வந்த பெண் மருத்துவர், கடந்த வியாழக்கிழமை (ஆக. 8) இரவுப் பணிக்கு வந்தார். அவர் வெள்ளிக்கிழமை காலை சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் உள்ள தாக்கா பல்கலைக்கழக மாணவர்களும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தாக்கா பல்கலைக்கழகத்தின் ராஜு சிலையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் ஆர்ப்பாட்டத்தில் ’பெண்களே, உங்கள் குரல்களை உயர்த்துங்கள்’ என்ற வாசகத்தை உயர்த்திப் பிடித்து மாணவர்கள் போராடி வருகின்றனர்.
”இதற்கு முந்தைய பாலியல் வன்முறைக் குற்றங்களில் பல வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் வெளிப்படையாக சொல்லப்பட்டு, குற்றம் செய்தவர்களின் பெயர்கள் மறைக்கப்படுகின்றன. சில சமயங்களில் இந்த வழக்குகள் அரசு அல்லது ஆளும் கட்சியால் மூடப்படுகின்றன. பெண்களை அவமதிக்கும் இதுபோன்ற அனைத்து விதமான செயல்களுக்கும் எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
கோஷங்களை எழுப்பியபடி பல்கலைக்கழகம் முழுவதும் மாணவர்களும், ஆசிரியர்களும் ஊர்வலமாக சென்றனர்.
போராட்டத்தில் பேசிய மானுடவியல் பிரிவு மாணவி அனியா ஃபாமின் ”வங்கதேசத்தில் பல பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்படாமலே போய்விடுகின்றன. பதியப்பட்ட வழக்குகளூம் அரிதாகவே விசாரணைக்கு வருகின்றன. பல சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவே வெளிச்சத்திற்கு வருகின்றன. அதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான நீதி கிடைப்பதில்லை.
கொல்கத்தாவில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனை இதுபோன்ற வழக்குகளில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என கூறினார்.
இங்கு மட்டுமின்றி, வங்கதேசத்தில் பல இடங்களிலும் இந்த சம்பவத்திற்கு எதிராக மக்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.