
ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று அல்ல என்றும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்குத் தெரியும் என்றும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று பேசிய உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், “நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும்.
நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது” என்று பேசினார்.
மேலும், “இந்த குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று அல்ல” என்றும் அவர் கூறினார்.
குரங்கு அம்மை நோயின் புதிய கிளேட் 1 வகை நோய் மீது அதிக கவனம் செலுத்துவதால், குறைந்த தீவிரம் கொண்ட கிளேட் 2 வகை மீதும் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது என்றும் இதன் மூலம் ஐரோப்பாவில் சிறந்த பொதுசுகாதார ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்பையும் வழங்க முடிவதாகவும் ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்தார்.
ஐரோப்பாவில் ஒவ்வொரு மாதமும் குரங்கு அம்மை நோயின் கிளேட் 2 வகைமையில் குறைந்தது 100 பாதிப்புகள் பதிவாவதாகக் கூறப்படுகிறது.
குரங்கு அம்மை என்பது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய வைரஸ் ஆகும். நெருக்கமான உடல் தொடர்பு மூலம் மனிதர்களிடையேயும் பரவக்கூடியது.
குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தசைகளில் வலி மற்றும் பெரிய கொப்புளங்கள் போன்ற காயங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.